கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோடை வெப்பம் தொடங்குவதற்கு முன்பே சதம் அடித்த வெயிலால் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கானல் நீர் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அரவக்குறிச்சி அருகே பரமத்தி பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மிதமான வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரிக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர். கொளுத்தும் வெயிலால் கரூர், கோவை தேசிய நெடுஞ்சாலையில் அனல் காற்று வீசுகிறது.
சாலையோரம் மற்றும் சில பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டதால் வெயில் கொளுத்துவதாகவும், வெட்டப்பட்ட இடங்களில் மரங்களை நடவேண்டும் என்றும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். பகல் நேரத்தில் தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். வெயிலால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.