ஊழல்வாதிகளான நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியைச் சேர்த்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையொட்டி, குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல். ஏ.வுமான புர்னேஷ் மோடி தொடர்ந்த இந்த வழக்கில், சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு வந்தது.
ராகுல் காந்தி மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உத்தரவிட்டார்.
எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.டெல்லி, துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள வீட்டில் ராகுல் காந்தி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவை துணை செயலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில் மக்களவை உறுப்பினராக இங்கு எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான நினைவுகளுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். எந்த பாரபட்சமும் இல்லாமல் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுக்கு நான் கட்டுப்படுவேன் என்று கூறியுள்ளார்.