புது டெல்லி: “உங்கள் கடிதத்திற்கு நன்றி. அதற்கு நான் கட்டுப்படுகிறேன்” என்று அரசு பங்களாவை காலி செய்வது குறித்த நோட்டீஸுக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நேற்று (திங்கள்கிழமை) நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு ராகுல் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிலளித்து மறு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர்,” கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக, இங்கு கழித்த மகிழ்ச்சியான நினைவுகளுக்காக நான் என்றும் கடமைப்பட்டுள்ளனேன். என்னுடைய உரிமைக்கு எந்த பாதகமும் இன்றி உங்கள் கடிதத்தில் உள்ள விசயங்களுக்கு நான் கட்டுப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை தீர்ப்பையடுத்து வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யும்படி அவருக்கு நேற்று (திங்கள்கிழமை) நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ராகுல் காந்தி 2005 ஆம் ஆண்டு முதல் வசித்துவரும் துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி மக்களவை வீட்டுக் குழுவில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. துக்ளக் லேன் பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஏப்ரல் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.