ஆப்ரிக்காவின் நமிபியா நாட்டில் இருந்து கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப் புலி ஷாஷா சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளது. புலிகளிலிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப் புலி. இந்தியாவில் இந்த இனம் அழிந்துவிட்டது என்பதால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தியாவில் அழிந்துவிட்ட இனமாக கருதப்பட்ட சிவிங்கி புலிகளை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில், நமிபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், உலகில் முதன்முறையாகக் கண்டங்களுக்கு இடையே காட்டு உயிரினங்களுக்கான பரிமாற்றம் நிகழ்ந்தது.
மொத்தம் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்குக் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று இந்தப் புலிகள் மத்தியபிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது. நமிபியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இந்தப் புலிகளை பிரதமர் மோடி பூங்காவில் திறந்துவிட்டார். இவற்றில் 5 பெண் சிவிங்கி புலிகள், 3 ஆண் சிவிங்கி புலிகள்.
இந்த ஐந்து பெண் சிவிங்கி புலிகளில் ஒன்றான சாஷாவிற்கு நான்கரை வயதாகிறது. ஜனவரி மாதம் சாஷா சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தினசரி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
ஆனால், சாஷாவின் பலவீனம் தொடர்ந்து அதிகரித்து, சோர்வாக இருந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் கிரியேட்டினின் அளவு அதிகமானதால், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் திங்கட் கிழமையன்று சிறுநீரக பாதிப்பால் சாஷா உரியிழந்துள்ளது. பூங்காவில் உள்ள மற்ற சிவிங்கி புலிகள் ஆரோக்கியத்துடன் உள்ளது.
“துரதிர்ஷ்டவசமாக சாஷா சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது. சில மாதங்கள் கால்நடை மருத்துவரின் பராமரிப்பில் சாஷா இருந்தது. எனவே இந்த இறப்பு எதிர்பாராதது அல்ல; சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு அனைத்து பூனைகளுக்குமான பிரச்னை. ஆனால் அது இயற்கையில் மென்மையான உயிரினங்களான சிவிங்கி புலிகளுக்கு மோசமானது” எனச் சிறுத்தை பாதுகாப்பு நிதியத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் லாரி மார்க்கர் தெரிவித்துள்ளார்.