இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புற்றுநோய் மருந்தில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான லெபனான் மற்றும் தென்மேற்கு ஆசியாவிலுள்ள ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள செலான் லேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த ஒரு பேட்ச் புற்றுநோய் மருந்தில், சூடோமோனஸ் என்ற வகையைச் சேர்ந்த பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
லெபனான் மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு, இந்த மருந்தைக் கொடுத்த பிறகு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதையடுத்து, மருந்துகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற தரமில்லாத மருந்துகளைப் பயன்படுத்தும் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றும் அந்நாட்டு அரசுகள் எச்சரித்துள்ளன.
இந்தியாவில் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மருந்தானது, வெளிநாட்டில் பயன்பாட்டுக்குச் சென்றுள்ளது. இதன் மூலம் இம்மருந்துகள் கள்ளச் சந்தையின் மூலம் இவ்விரண்டு நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தெரிவித்த தகவலில், செலான் லேப்ஸ் தயாரித்த ‘மெத்தோட்ரெக்ஸேட்’ (Methotrexate) என்ற ஊசி வழியாகச் செலுத்தப்படும் கீமோதெரபி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் மருந்து (immune system suppressant) உள்ளிட்ட நான்கு தரமில்லாத மற்றும் கெட்டுப்போன மருந்துகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், விற்பனைக்கு அனுமதியில்லாத சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இம்மருந்துகளின் பாதுகாப்புக்கு உற்பத்தியாளர்கள் உறுதி கொடுக்க முடியாது. இதுபோன்ற கள்ளச் சந்தையின் மூலம் இம்மருந்துகள் வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனவா என்பது குறித்த கவலை உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த செலான் லேப்ஸ் நிறுவனத்துக்கு தெலங்கானா மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ‘மெத்தோட்ரெக்ஸேட்’ மருந்து உற்பத்தியை நிறுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் மீது புகார் வெளிவந்துள்ளது சமீபத்தில் இது மூன்றாவது முறையாகும்.