புதுடெல்லி: மக்கள்தொகை – காவல் துறையினர் விகிதாச்சாரத்தில் பிஹாரும், மேற்கு வங்கமும் பின்தங்கி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை காவல் துறையினர் இருக்க வேண்டும், அதாவது அரசு அனுமதித்துள்ள எண்ணிக்கை எத்தனை, உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரத்தை காவல் துறை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அரசு அமைப்பு சேகரித்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி சேகரிக்கப்பட்ட விவரங்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் இன்று வெளியிட்டார்.
அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 181.75 காவல் துறையினர் இருக்க வேண்டும்; ஆனால் 133.86 காவல் துறையினரே இருக்கின்றனர். குஜராத்தில் 174.39 காவல் துறையினர் இருக்க வேண்டும்; ஆனால் 127.82 காவல் துறையினரே உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 147.23 காவல் துறையினர் இருக்க வேண்டிய நிலையில் 121.76 காவல் துறையினரே இருக்கின்றனர்.
மகாராஷ்ட்டிராவில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் எண்ணிக்கை 186.36 ஆக உள்ள நிலையில், 136.45 காவல் துறையினரே உள்ளனர். ஒடிசாவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 147.76 ஆக உள்ளது; ஆனால் 122.59 காவல் துறையினரே உள்ளனர். ராஜஸ்தானில் 139.81 காவல் துறையினர் இருக்க வேண்டிய இடத்தில் 120.39 காவல் துறையினரே இருக்கின்றனர். தமிழகத்தில் 171.95 காவல் துறையினர் இருக்க வேண்டும்; ஆனால் 154.25 காவல் துறையினரே உள்ளனர்.
நாட்டிலேயே பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில்தான் பொதுமக்கள்; காவல் துறையினர் விகிதம் மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. பிஹாரில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 75.16 காவல் துறையினரும், மேற்கு வங்கத்தில் 97.66 காவல் துறையினருமே உள்ளனர்.
தேசிய அளவில் சராசரியாக ஒரு லட்சம் மக்களுக்கு அரசு அனுமதித்துள்ள காவல் துறையினரின் எண்ணிக்கை 196.23; இருக்கக் கூடிய காவல்துறையினரின் எண்ணிக்கை 152.80.