சென்னை: அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியை வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 66 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் 2023– 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று (மார்ச் 27) தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மாதந்திர கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று (மார்ச் 28) நடந்தது. அப்போது, 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய தீர்மானங்கள்:
* தமிழக அரசால், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இணையவழியில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வசதியினை நீக்கப்படுகிறது.
* சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கணக்கிட்டு கண்காணிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
* எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 5.89 கோடி ரூபாய் மதிப்பில் இன்குபேட்டரில் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ளபோது, தாய்மார்கள் காத்திருக்கும் அறை, உணவு விடுதி உள்ளிட்ட பல்நோக்கு கூடம் கட்ட அனுமதி.
* சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் புதிதாக மழைநீர் வடிகால் கட்டுவதற்கும், பழைய மழைநீர் வடிகால் கால்வாய்களை இடித்து புதிதாக கட்ட அனுமதி.
* மண்டலம் 1 முதல் 8 வரை தினமும் சேகரிக்கப்படும் 50 ஆயிரம் கிலோ குப்பை மணலி குப்பை கிடங்கில் காற்று புகும் வகையில் பதனம் செய்து உரம் தயாரிக்கும் நிலையத்தை ஒரு ஆண்டுக்கு செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் பணி வழங்குவதற்கு அனுமதி
* சென்னை மாநகராட்சி பராமரிக்கும் பல்வேறு பேருந்து செல்லும் சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம்.
* அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் இறந்தோர் உடலை வைத்திருக்கும் அறை கட்டுவதற்கு அனுமதி.
* சென்னை மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு, டி.எம்.சவுந்தரராஜன் பெயர் சூட்டப்பட்டதற்கு பின் ஏற்பு அனுமதி.
* மெரினா காமராஜர் சாலையையும் அண்ணா சாலையையும் இணைக்கும் முக்கிய சாலைான அவ்வை சண்முகம் சாலையினை, மெரினாவில் இருந்து ராயப்பேட்டை இந்திய வங்கி தலைமை அலுவலகம் வரை உள்ள பகுதியை வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்ய அனுமதி.