சண்டிகர்: கொலை வழக்கில் கைதான குற்றவாளியின் ஜாமீன் மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி அனுப் சித்கரா, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட் ஜிபிடி-யின் உதவியை நாடியுள்ளார். அதுவும் குற்றவாளிக்கு இந்த வழக்கின் சாரம்சத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாமீன் வழங்கலாமா என நீதிபதி சாட் ஜிபிடியில் வினவியுள்ளார். இந்திய நீதித்துறையில் இது முதல் முறை எனத் தெரிகிறது.
கடந்த 2020-ல் ஜஸ்வி என்ற ஜஸ்விந்தர் சிங், லூதியானாவில் உள்ள சிம்லாபுரி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். அவரும், அவரது கூட்டாளிகளும் சில மீது நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதுதான் அவர் மீதான குற்றம். அவரது ஜாமீன் மனுவை பஞ்சாப் அரசு தரப்பு எதிர்த்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சாட் ஜிபிடி உதவியை நீதிமன்றம் நாடியுள்ளது. “குற்றவாளிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு இருந்தால் அவர்களுக்கான ஜாமீன் வழங்குவதில் உள்ள நீயதி என்ன?” என நீதிமன்றம் சாட் ஜிபிடி வசம் கேட்டது.
“பொதுவாக கொலை, கொடூர தாக்குதல் போன்ற குற்ற செயல்களை உள்ளடக்கிய குற்றத்திற்காக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்களாக கருதப்படலாம். இது போன்ற வழக்குகளில் பெரும்பாலும் நீதிபதி ஜாமீன் வழங்க விரும்பாதவராக இருக்கலாம். அல்லது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகி பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் ஜாமீன் தொகையை அதிக அளவில் நிர்ணயம் செய்யலாம். குற்றத்தின் தீவிரம், பிரதிவாதியின் குற்றவியல் வரலாறு மற்றும் அவர்களுக்கு எதிரான சாட்சியங்களின் ஆதாரம் முதலியவற்றை பொறுத்து ஜாமீன் வழங்கலாமா என்பதை தீர்மானிக்கும் போது நீதிபதி கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளாகும்.
அதனால் இதுமாதிரியான வழக்குகளில் குற்றவாளிகளால் சமூகத்திற்கு ஆபத்து ஏதும் இல்லை என்று நீதிபதி தீர்மானித்தால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படலாம்” என சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளி மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தால் அவருக்கு ஜாமீன் மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், இது ஒரு ரெபரென்ஸாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், நீதித்துறையில் ஜாமீன் குறித்த ஒரு பரந்த விளக்கத்தை முன்வைக்கும் நோக்கில் இது முன்னெடுக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.