தொழில்நுட்ப உச்சங்களைத் தொட்டிருக்கும் இந்த நவீன சமூகத்தில் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ஒன்றுதான், ChatGPT. புரோக்ராம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான ChatGPT, மொழிபெயர்த்தல், கட்டுரை எழுதுதல், தரவுகளை உள்ளீடு செய்தல் (Data Entry), கணிதக் கேள்விகளுக்கு விடையளித்தல், மனிதர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தல் போன்ற பல வேலைகளைச் செய்கிறது.
இதன் காரணமாக பல இடங்களில், தங்களின் வேலைகள் கூட போய்விடுமோ என்று மனிதர்களே அச்சம் கொள்கின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் உயர் நீதிமன்றம், கொடூரமான கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது, ChatGPT – AI chatbot உதவியை நாடியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
விசாரணை இறுதியில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு இதுகுறித்து பேசிய நீதிபதி, “நீதித்துறையில் ஜாமீன் குறித்த பரந்துபட்ட தன்மையை முன்வைப்பது மட்டுமே இதன் நோக்கம். ஏனெனில் இங்கு `கொடூரம்’ என்பது ஒரு காரணியாக இருக்கிறது. மரணத்தை ஏற்படுத்துவதே கொடூரமானது தான். அதுவே, கொடூரமான முறையில் மரணத்தை ஏற்படுத்தும்போது அதன் அளவீடுகளே மாறிவிடும். கொடூரத்தின் ஒரு பகுதியாக, உடல்ரீதியான தாக்குதல் ஏற்படுத்தப்படும்போது, ஜாமீனின் அளவுகோலும் மாறுபடுகிறது. அதோடு, குற்றம் கொடூரமாவதும், கொடூரமான முறையில் குற்றம் நிகழ்வதும் வெவ்வேறானது. எனவே இது, ஜாமீன் வழங்கப்படும்போதோ அல்லது மறுக்கப்படும்போதோ முக்கிய காரணியாக மாறுகிறது.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர் கொடூரமாகச் செயல்பட்டார் என்ற முதன்மையான கருத்தை நீதிமன்றங்கள் முன்வைத்தால், அத்தகைய குற்றவாளிக்கு சாதாரணமாக ஜாமீன் வழங்கப்படக்கூடாது. அதுமட்டுமல்லாமல் இதில், தாக்குதல் கொடூரமானதாக இருக்கும்போது, ஜாமீன் மீதான உலகளாவிய பார்வையை மேலும் மதிப்பிடுவதற்காக, பல தரவுகளுடன் பயிற்சியளிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தளத்தை நீதிமன்றம் பயன்படுத்தியது” என்றார்.