தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி பல முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து அதிக அளவில் அனைவராலும் பேசப்பட்டு வந்தவர் நடிகர் சூரி. பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்ட இவர் தற்போது ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூரி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார். அப்போது விழா மேடையில் பேசிய அவர், ‘’தற்போது உள்ள சூழலில் அனைத்து வயது குழந்தைகளிடமும் செல்போன் உள்ளது.
அந்த செல்போனில், நிறைய நல்ல விஷயங்களும், நிறைய கெட்ட விஷயங்களும் உள்ளது. இதனை பெற்றோர்கள் தான் அவரது பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.
என்னுடைய நண்பரின் 2 வயது குழந்தை அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததால், கண் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் பெற்றோர்கள் செல்போனை அளவோடு பயன்படுத்த வேண்டும். பின்னர் பிள்ளைகளையும் தேவைக்கு மட்டும் பயன்படுத்த சொல்லுங்கள்’’ என்றுத் தெரிவித்தார்.