ஓபிஎஸ் ஆதரவாளர் வா.புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, “நாடே எதிர்பார்த்த தீர்ப்பை இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது பொதுச் செயலாளர் ஆகிவிடலாம் என்கின்ற ஆர்வத்தின் கோளாறு காரணமாக, என்ன தீர்ப்பு என்பதை முழுவதுமாக படிக்காமல், ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம், பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்குதல் என்றெல்லாம் கொண்டாடினார்கள்.
தீர்ப்பு கைக்கு வந்த பின்னால் தெரிகிறது தெளிவாக புரிகிறது. இதே தீர்ப்பில் 66 ஆவது பத்தியில் ஆறாவது விதிகளின்படி கட்சியை விட்டு நீக்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னாள் நோட்டீஸ் கொடுத்து இருக்க வேண்டும், அந்த நடைமுறை பின் படுத்தப்படவில்லை, நிலுவையில் உள்ள சிவில் முதன்மை வழக்கில் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
1.55 கோடி உறுப்பினர்கள் மீது கொண்டுள்ள அக்கறையால் பொதுச் செயலாளர் பதவி தொடரலாம் என கூறப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் ஐந்து வருட காலம் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்த முடியாத ஒருங்கிணைப்பாளர் பதவியை பற்றி தீர்ப்பில் கூறப்படவில்லை.
இந்தத் தீர்ப்பின் படி ஒருங்கிணைப்பாளரும் தொடர்கிறார். பொதுச் செயலாளரும் தொடர்கிறார் என்கின்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, அமர்வு நீதிமன்றமும் நிலுவையில் உள்ள சிவில் மெயின் வழக்கு தான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பற்றி முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறது.
இப்படிப்பட்ட குளறுபடிகள் அனைத்தையும் எங்களது வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டில் எடுத்து வைப்பார்கள் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.