சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து நடந்த நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர், அதிமுக பொதுச் செயலாளராக அக்கட்சியின் தொண்டர்களால் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளவர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. சாதாரண தொண்டராக அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை எட்டிய எடப்பாடி பழனிசாமியின் வாழ்வின் மறக்கமுடியாத நாளான மார்ச் 28-ம் தேதி நிகழ்ந்தவை விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு
அதிமுக பொதுக்குழு செல்லும்: கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தீர்ப்புக்காக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவர் உத்தரவிட்டார்.
ஓபிஎஸ் நீக்கம் குறித்து முதன்மை வழக்கில் முடிவு: பொதுக்குழு தீர்மானங்களை எதிர்ததும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி குமரேஷ் பாபு 85 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானங்களுக்கு தடை விதித்தால், மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கட்சியை நிர்வகிக்க வேண்டிவரும். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், கட்சியின் செயல்பாடுகள் முடங்கக் கூடிய அபாயம் ஏற்படும்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்டுள்ள சிறப்பு தீர்மானத்தைப் பொறுத்தவரை, அதுகுறித்து முதன்மை வழக்கில்தான் தீர்மானிக்க முடியும். 7 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டிய விதி மீறப்பட்டுள்ளது என்றாலும்கூட, அந்தச் சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதித்தால், அது அக்கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த தீர்மானத்துக்கு தடை விதிக்க முடியாது.
பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதால், இதில் தடை எதுவும் விதிக்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் தடை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீடு: ஒபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தீர்ப்புக்கு தடைவிதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பினர் உடனடியாக முறையீடு செய்தனர்.
பின்னர் ஓபிஎஸ் மற்றும் மனோஜ்பாண்டியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கட்சி விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் இந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும். மேலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்வு: அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’’ என்ற கட்சியின் சட்ட திட்ட விதி – 20 (அ), பிரிவு – 2ன்படியும், கழக சட்ட திட்ட விதி – 20அ, பிரிவு – 1, (ஏ), (b), (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படியும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு.பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது, தேர்தல் ஆணையாளர்களான, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி ஏ.ஜெயராமன், ஆகியோரால் செவ்வாய்க்கிழமை (மார்ச்.28) அறிவிக்கப்பட்டு, அதற்கான வெற்றிப் படிவத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமியிடம் வழங்கினார்கள் என்று அக்கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
‘எம்ஜிஆர்,ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்’ – இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுச் செயலாளராக நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர். என்னை அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.
ட்விட்டர் பயோ மாற்றம்: அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பயோவில் ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என மாற்றம் செய்தார்.
ஏப்.5 முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை: பொதுச் செயலாளர் பதவியேற்றபின் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கட்சியின் சட்ட திட்ட விதிமுறைப்படி, கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.
கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ.10 வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொண்டர்கள் கொண்டாட்டமும் தலைவர்கள் வாழ்த்தும்: அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் பொதுச் செயலாளராகா தேர்வு செய்யப்பட்டுள்ள இபிஎஸ்ஸுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இன்றைய தினத்தில் எம்.ஜி.ஆர் பாணி தொப்பி அணிந்தபடி முழுச் சிரிப்புடன் எடப்பாடி பழனிசாமி போஸ் கொடுத்ததுதான் சமூக வலைதளங்களில் வெகுவாக ஈர்த்தது.