2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவரும் பாஜக, 2024-லும் ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்ய முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக-வின் புதிய மத்திய அலுவலகம் டெல்லியில் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், `பாஜக மட்டுமே இந்தியாவின் `PAN-INDIA PARTY’ ‘ எனப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
டெல்லியில் பாஜக-வின் புதிய மத்திய அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய மோடி, “1984-ன் இரண்ட காலத்தை நாடு ஒருபோதும் மறக்காது. ஆனால், அந்தத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு வரலாற்று முடிவுகளும் கிடைத்தன. அந்த காலகட்டத்தில் நாங்கள் முற்றிலுமாக அழிந்தோம். ஆனால், மன உளைச்சலுக்கு நாங்கள் ஆளாகவில்லை, மற்றவர்களை குறைகூறவில்லை. இரண்டு மக்களவை இடங்களுடன் தொடங்கிய எங்களின் பயணம், 303 மக்களவை இடங்களை எட்டியிருக்கிறது. கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் பாஜக மட்டுமே `PAN-INDIA PARTY’.
இளைஞர்கள் முன்னேற பா.ஜ.க வாய்ப்பளிக்கிறது. அரசியலமைப்பு நிறுவனங்களின் வலுவான அடித்தளம் எங்களிடம் இருக்கிறது. அதனால்தான், இந்தியா தடுத்து நிறுத்தப்படுகிறது, அரசியலமைப்பு நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்கும்போது, தடுத்து நிறுத்தப்படுகின்றன, நீதிமன்றங்களில் கேள்வி எழுப்பப்படுகின்றன. சில கட்சிகள் ‘பிரஷ்டாச்சாரி பச்சாவோ அபியான்’ தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க ஒன்றும், தொலைக்காட்சிகளிலோ, செய்தித்தாள்களிலோ, ட்விட்டரிலோ, யூடியூப் சேனல்களிலிருந்தோ வரவில்லை. பா.ஜ.க முற்றிலும் தொண்டர்களின் உழைப்பால் உருவான கட்சி” என்றார்.