மெக்சிகோ சிட்டி,
அமெரிக்கா எல்லையை ஒட்டி மெக்சிகோ நாடு அமைந்து உள்ள நிலையில், எல்லையை கடந்து உள்ளே அத்துமீறி நுழைபவர்களை தடுக்கும் பணியை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது.
இதன்படி, சட்டவிரோத வகையில் அமெரிக்காவுக்குள் வரும் கியூபா, நிகரகுவா மற்றும் ஹைதி நாட்டை சேர்ந்த அகதிகளை வெளியேற்றி வருகிறது. எனினும், ஆண்டுதோறும் அகதிகள் புலம்பெயர்தல் நடந்து வருகிறது.
இதனால், 3 நாடுகளுடன் வெனிசுலாவையும் சேர்த்து மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேரை அனுமதிக்கலாம் என அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.
இந்நிலையில், மெக்சிகோ நாட்டின் வடக்கே அமெரிக்க எல்லையை ஒட்டிய சியுடாட் ஜுவாரெஜ் நகரில் தேசிய அகதிகள் மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் மத்திய மற்றும் தென்அமெரிக்காவை சேர்ந்த வயது முதிர்ந்த 68 ஆண்கள் உள்ளனர்.
இந்நிலையில், அகதிகள் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், சிக்கி 39 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, 29 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று உள்ளனர். மெக்சிகோ நாட்டு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. அவர்களில் பலர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.