புதுடெல்லி: பாஜகவின் புதிய மத்திய அலுவலகம் டெல்லியில் இன்று திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “1984-ன் இருண்ட காலத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. அக்காலகட்டத்தில் நாங்கள் முற்றிலுமாக அழிந்தோம். எனினும், மன உளைச்சலுக்கு ஆளாகவில்லை. அதற்காக மற்றவர்களை குறைகூறவில்லை.
வெறும் இரண்டே இரண்டு மக்களவை வெற்றியுடன் தொடங்கிய எங்களின் பயணம், 303 மக்களவை இடங்கள்வரை எட்டியிருக்கிறது. கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் பாஜக மட்டுமே தற்போது `PAN-INDIA’ கட்சி.
இளைஞர்கள் முன்னேற பாஜக வாய்ப்பளித்து வருகிறது. தொலைக்காட்சிகளிலோ, செய்தித்தாள்களிலோ, ட்விட்டரிலோ, யூடியூப் சேனல்களிலிருந்தோ வந்த கட்சியல்ல பாஜக. முற்றிலும் தொண்டர்களின் உழைப்பால் உருவான கட்சி பாஜக.
எங்களிடம் அரசியலமைப்பு அமைப்புகளின் வலுவான அடித்தளம் உள்ளது. அதனால்தான் இந்தியாவைத் தடுக்க, அரசியலமைப்பு நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்கும்போது தாக்கப்படுகின்றன, நீதிமன்றங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் PMLA (பணமோசடிக்கு எதிரான சட்டம்) கீழ், மொத்தம் 5,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில், நாங்கள் சுமார் 10,00,000 கோடி பறிமுதல் செய்துள்ளோம். தப்பி ஓடிய இருபதாயிரம் பொருளாதார குற்றவாளிகள், எங்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஏழு தசாப்தங்களில் முதல் முறையாக ஊழல்வாதிகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இவ்வளவு செய்யும்போது, சிலர் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள், ஆனால் அவர்களின் (எதிர்க்கட்சி) பொய்யான குற்றச்சாட்டுகளால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படாது” என்றார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஒண்றிணைவதை குறிப்பிட்டு “ஊழல் ஒரே மேடையில் ஒன்று கூடுகிறது” என்று விமர்சித்தார் பிரதமர் மோடி.