சென்னை: “தொண்டர்களாலும், பொது மக்களாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சக்திதான் ஓபிஎஸ். அவருடைய கருத்தை யாரும் பெரிய அளவில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருக்கு எப்படி கட்சியில் இடமிருக்கும். எதிர்காலத்திலும் அவருக்கு அதிமுகவில் இடமே கிடையாது” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ்ஸுக்கு அதிமுகவில் இடம் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அதாவது, கடிக்கும் மிருகங்களுடன்கூட வாழ்ந்துவிடலாம். நேற்றைக்கு ஒன்று, இன்றைக்கு ஒன்று என தனது சொல்லை மாற்றிக் கொள்கிற அந்த நிறமாறிகளுடன் என்றைக்குமே வாழ முடியாது.
ஓபிஎஸ் தொண்டர்களாலும், பொது மக்களாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சக்தி. எனவே அவருடை கருத்தை யாரும் பெரிய அளவில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். அவருக்கு எப்படி கட்சியில் இடமிருக்கும். எதிர்காலத்திலும் அவருக்கு அதிமுகவில் இடமே கிடையாது” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.