சேலம்: சேலம் அருகே மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் ஒருவர், தோல்வி பயத்தால் தனியார் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் என்பவரது மகன் சந்துரு (19) தங்கி நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று மாணவன் சந்துரு பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆத்தூர் போலீஸார் சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆட்சியர் கார்மேகம், எஸ்பி சிவக்குமார், டிஎஸ்பி நாகராஜன், ஆர்டிஓ சரண்யா விடுதி நிர்வாகத்திடமும், மாணவர் சந்துருவின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் உள்ள நிலையில், தனியார் பள்ளியில் இரண்டாவது நாளாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர் சந்துரு இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிலையில், தோல்வி பயத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |