எடப்பாடி டு எம்ஜிஆர் மாளிகை… ரைஸ் ஆஃப் `எடப்பாடி கே பழனிசாமி’

யார் இந்த எடப்பாடி பழனிசாமி?

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1954-ம் ஆண்டு மே 12-ம் தேதி பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு வாசவி கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, உள்ளூரிலேயே வெல்ல வியாபாரம் செய்துவந்தார். அந்த காலகட்டத்தில்தான் (1974) அமைச்சர் செங்கோட்டையன் மூலம் அரசியலுக்குள் காலெடுத்து வைத்தார் பழனிசாமி. தி.மு.க-விலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கி, அப்போது இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. கோணேரிப்பட்டி கிளைச் செயலாளர் பொறுப்பு எடப்பாடிக்கு கிடைத்தது.

ஜெயலலிதா – எடப்பாடி பழனிசாமி

தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அ.தி.மு.க தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் வேர்விட்டுப் பரவியிருந்தது. எனினும் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க தோல்வியுற்று தி.மு.க மீண்டும் ஆட்சியமைத்தது. அந்தத் தேர்தலில்தான் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்தில் கால்வைத்தார். 1991 தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றவருக்கு, 1996, 2006 தேர்தல்கள் சறுக்கலைக் கொடுத்தன. இதற்கிடையே, 1998-ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அதே தொகுதியில் 1999 மற்றும் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியும் கண்டிருக்கிறார். இருப்பினும் கட்சிக்குள் அவரின் செல்வாக்கு தொய்வின்றி வளர்ந்தது. கிளைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்தார்.

சசிகலா – எடப்பாடி பழனிசாமி

வெற்றி – தோல்வி, ஏற்றம் – இறக்கம் என அரசியலில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருகட்டத்தில் சசிகலாவின் நம்பிக்கைக்குரிய நபராக மாறினார். அ.தி.மு.க-வுக்கு வருவாய் திரட்டுவது உள்ளிட்ட கட்சியின் உள் விவகாரங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, ஜெயலலிதாவின் விசுவாசத்தைப் பெற்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. எடப்பாடி தொகுதியில் பா.ம.க வேட்பாளர் அருளை 34,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அடுத்து 2016-ம் ஆண்டில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டு முறை அமைச்சராகப் பதவி வகித்தபோதும் கொங்கு மண்டலத்துக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி மக்கள் செல்வாக்கு பெற்ற நபராக இருக்கவில்லை. இந்தச் சூழலில்தான் 2016-ம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம், அ.தி.மு.க-வின் எதிர்கால அரசியலை தலைகீழாகப் புரட்டிப்போட்ட புயலாக மாறியது.

ஜெயலலிதா மரணம்

புயலில் கரைசேர்ந்த எடப்பாடி பழனிசாமி…

அந்தப் புயலில் கரைசேர்ந்துவிடுவார்கள் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்ட நபர்கள் சிலர், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓய்ந்துகிடக்கின்றனர். அப்போது இருந்த இடமே தெரியாமல் இருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது எம்.ஜி.ஆர் மாளிகையின் அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறார். இது தற்செயலாக நடந்தது என்று எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியாத அளவுக்கு, சதுரங்க விளையாட்டில் காய்களை பார்த்துப் பார்த்து நகர்த்துவதுபோல துல்லியமாக ஒவ்வோர் அடியையும் எடுத்துவைத்து அரசியல் சதுரங்கத்தில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 2016-ம் ஆண்டு ஜெயலலிதா தனது மூச்சை நிறுத்திக்கொண்ட பிறகு, அடுத்த முதல்வர் யார்… அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்விகள் எழுந்தன.

சசிகலா, பன்னீர்

ஜெயலலிதா மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்தபோதே ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டு நிர்வாகப் பணிகளைக் கவனித்துவந்தார். ஆனால், டிசம்பர் 29-ம் தேதி கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட, 2017 பிப்ரவரி 5 அன்று அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டார். இதனால் முதல்வர் பதவியை அவரிடம் விட்டுத்தர வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவின் அதிரடி நடவடிக்கைகள் பன்னீர்செல்வத்துக்கு அதிருப்தியைக் கொடுத்தன.

ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்துவிட்டு ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தத்தைத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். தமிழ்நாட்டு ஊடகங்கள் முதல் தேசிய ஊடகங்கள் வரை அனைத்து ஊடகங்களின் கேமராக்களும் பன்னீர்செல்வம் என்ன பேசப்போகிறார் என்று அவருக்கு ஃபோக்கஸ் வைத்துவிட்டுக் காத்திருந்தன. சுமார் 40 நிமிடங்கள் தியானத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தன்னை வற்புறுத்தி சசிகலா பதவியை பறித்துவிட்டதாக சரமாரியாகக் குற்றம்சாட்டினார். சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர் பன்னீர்செல்வத்துடன் கைகோத்தனர். அப்போது 7 எம்.எல்.ஏ-க்கள், 10 எம்.பி-க்கள் ஓ.பி.எஸ் வசம் இருந்ததால், ஆதரவு அலையைப் பலப்படுத்தி ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றிவிடலாம் என்று கருதிக்கொண்டிருந்தார்.

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்

மற்ற எம்.எல்.ஏ-க்கள் அணி மாறாமல் இருக்க வேண்டுமென்பதற்காக அனைவரையும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைத்தார் சசிகலா. இந்தச் சூழலில்தான் பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைவாசம் பெற்றார் சசிகலா. சிறைக்குச் செல்லும் முன் தனக்கு விசுவாசம் மிக்க ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்த நினைத்தார் சசிகலா. செங்கோட்டையன் போன்ற மூத்த அமைச்சர்கள் பலர் அங்கு இருந்தபோதும் சசிகலா உட்பட, அனைவராலும் ஒருமித்து தேர்வு செய்யப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. கண்ணீர் ததும்ப சசிகலாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்துவிட்டுச் சிறைக்குச் சென்றார் சசிகலா.

சசிகலா சிறைவாசத்துக்குப் பிறகு ஓங்கிய எடப்பாடியின் கை

சசிகலாவின் சிறைவாசத்துக்குப் பிறகு அ.தி.மு.க-வில் காட்சிகள் அனைத்தும் அப்படியே மாறின. கட்சிக்கு டி.டி.வி.தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி என சசிகலா வகுத்து வைத்துவிட்டுச் சென்ற வியூகம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து மெல்ல ஓரங்கப்பட்டார். முதல்வராக இருந்த எடப்பாடியின் கை ஓங்கியது. டி.டி.வி.தினகரன் பக்கம் 17 எம்.எல்.ஏ-க்கள் சென்றதால் ஆட்சி கவிழும் சூழல் உருவானது. ஆட்சியைத் தக்கவைக்க அவருக்கு அப்போது இருந்த ஒரே சாய்ஸ் ஓ.பன்னீர்செல்வம்தான். இரு தரப்பையும் இணைத்துவைக்க டெல்லியின் சமரச தூதுக்களும் முக்கியக் காரணமாக அப்போது கூறப்பட்டன. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பசுமை வழிச்சாலையிலுள்ள எடப்பாடியின் வீட்டுக்கும் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கும் மாறி மாறிச் சென்று நடத்திய பேச்சுவார்த்தைகள், அன்றைய காட்சி ஊடகங்களில் 24 மணி நேரலையாக மாறின. முதல்வர் பதவிக்காக கட்சியை இரண்டாக உடைக்க முற்பட்ட அதே ஓ.பன்னீர்செல்வம், இப்போது துணை முதல்வர் பதவிக்கு சம்மதித்து எடப்பாடி பழனிசாமியுடன் கைகோத்து ஆட்சியைக் கவிழாமல் பாதுகாத்தார். 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 21-ல் இருவரையும் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர ராவ் இருவரின் கைகளை இணைத்து சேர்த்துவைத்தார்.

கூவத்தூர்

சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க-வில் சேர்க்கக் கூடாது, கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என்பது போன்ற சில முக்கிய டீல்கள் இருவருக்குள்ளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமைப் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். அடுத்த நான்கு ஆண்டுகள் ஆட்சிக்கட்டில் சுமுகமாக நகர்ந்தது. ஆனால், இரட்டைத் தலைமை விவகாரம் உள்ளுக்குள் புகைச்சலைக் கொடுத்துக்கொண்டே இருந்தது. கட்சிப் பதவியில் உயரிய இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும், ஆட்சியைக் கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான நாள்கள் நெருங்கின. அப்போது மீண்டும் கட்சிக்குள் புகைச்சல் வெடித்தது. யார் முதல்வர் வேட்பாளர் என்பதுதான் அப்போதைய கேள்வி. நான்கு ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்திய எடப்பாடி பழனிசாமியே முதல்வராக தொடர வேண்டுமென்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும், அதுதானே நியாயம் என்று கருதினார் ஓ.பன்னிர்செல்வம். மீண்டும் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்கினர். பசுமைவழிச்சாலைக்கும் எம்.ஜி.ஆர் மாளிகைக்கும் அமைச்சர்களின் கார்கள் ஓயாது ஓடிக்கொண்டே இருந்தன. ஒருவழியாக ஓ.பன்னீர்செல்வத்தை சம்மதிக்கவைத்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் பரப்புரையில் அ.தி.மு.க-வின் ஒற்றை முகமாக எடப்பாடி பழனிசாமி மட்டுமே தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்தார்.

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வமோ பெயரளவுக்கு சில இடங்களில் மட்டும் பரப்புரையில் ஈடுபட்டார். இருவருக்குள்ளும் மனக்கசப்பு உச்சத்தில் இருப்பதை தேர்தல் கால சம்பவங்களே வெளிக்காட்டின. அ.தி.மு.க தேர்தலில் தோல்வியடைந்தாலும் 66 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் அ.தி..முக படுதோல்வியைச் சந்தித்திருந்த போதிலும், கொங்கு மண்டலத்தில் மட்டும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதனால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியே இருக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர். நிர்வாகிகளின் ஆதரவைப் படிப்படியாக இழந்துவிட்ட ஓ.பன்னீர்செல்வம் வேறு வழியின்றி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இனியும் இரட்டைத் தலைமையை நம்பிக்கொண்டிருந்தால் சரியாக வராது, கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்றால், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றால் ஒற்றைத்தலைமைதான் சரிப்பட்டு வரும் என்று அ.தி.மு.க-வில் பேச்சுகள் அடிபடத் தொடங்கின.

இபிஎஸ், ஓபிஎஸ்

பன்னீர், பழனிசாமியிடையே வெடித்த மோதல்

மூத்த நிர்வாகிகளில் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்றதால் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுவதையே ஓ.பி.எஸ் துளியும் விரும்பவில்லை. 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது, எடப்பாடி பழனிசாமி அதை மறுத்தார். அந்த சமயம் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க-வில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, அப்படித் திட்டமும் இல்லை’’ என்றார். ஆனால் ஜூன் 23-ம் தேதி வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என இருவரும் கையெழுத்திட்டு அறிவித்தனர். அந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பாக ஜூன் 14-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றைத் தலைமையைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெளிப்படையாக போட்டுடைத்தார்.

அ.தி.மு.க பொதுக்குழு

அ.தி.மு.க-வில் மீண்டும் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றது. ஒற்றைத் தலைமை கூடவே கூடாது என்று விடாப்பிடியாக நின்றார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரிலேயே ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்திருப்பதாக அவர் கருதினார். இருவரும் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினர். பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார் ஓ.பன்னீர்செல்வம். பொதுக்குழுவையும் நடத்தவும், விதிகளைத் திருத்தவும் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மீண்டும் மேல்முறையீடு செய்தார் ஓ.பன்னீர்செல்வம். விடிந்தால் பொதுக்குழு என்ற நிலையில், ஏற்கெனவே ஆலோசித்து முடிவெடுக்கப்பட்ட தீர்மானங்களைத் தவிர புதிதாக எந்த தீர்மானமும் கொண்டு வரக் கூடாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற கனவோடு காத்திருந்த பழனிசாமிக்கு அன்றைய தினம் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், பொதுக்குழு மேடையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய ட்விஸ்ட் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. மேடையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு வரும் வழியெங்கும் பிரமாண்ட வரவேற்பு. பன்னீர்செல்வமோ வானகரத்துக்கு வருவதற்குள் சிரமப்பட்டுப்போனார். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், 23 தீர்மானங்களில் ஒரு தீர்மானத்தைக்கூட நிறைவேற்றப்போவதில்லை என சி.வி.சண்முகம் ஒலிபெருக்கியில் முழங்கினார். அவரை ஆமோதித்து கே.பி.முனுசாமியும் முழக்கமிட, பொதுக்குழு கூட்டம் களேபரமானது.

தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக்கப்படுவதை மட்டும் பொதுக்குழு ஏற்பதாக வைகைச்செல்வன் கூறினார். பன்னீர்செல்வத்துக்கு எதிராக அரங்கம் முழுவதும் முழக்கங்கள் அதிர்ந்தன. உடனே தனது ஆதரவாளர் வைத்திலிங்கத்துடன் மேடையைவிட்டு கீழே இறங்கினார். “ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்த பொதுக்குழுவைப் புறக்கணிக்கிறோம்” என ஆவேசமாக ஒலிபெருக்கியில் தெரிவித்தார் வைத்திலிங்கம். தண்ணீர் பாட்டில்கள், காகிதங்கள் அவர்களை நோக்கி வீசப்பட்டன. இரண்டு முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பெரும் அவமதிப்புடன் அங்கிருந்து வெளியேறினார்.

மீண்டும் ஜூலை 11-ல் பொதுக்குழு கூடும் என அதே மேடையில் அறிவித்தார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்கு நிரந்தர ஒற்றைத் தலைமை ஏற்படுத்துவது என்பதே அந்தப் பொதுக்குழுவின் பிரதான நோக்கமாக இருந்தது. அந்த ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி என்பதே சுமார் 80% பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்வாக இருந்தது. திட்டமிட்டபடி ஜூலை 11-ல் பொதுக்குழு கூடியது. கட்சி விதிகளில் மீண்டும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இரட்டைத் தலைமை பதவி நீக்கப்பட்டது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. நிரந்தரப் பொதுச்செயலாளரை முறைப்படி தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் வரை இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். நான்கு மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜூலை 23-ல் நடந்த பொதுக்குழுவில் மாலை அணிவிக்க வந்த நிர்வாகிகளைத் தடுத்து, ஆவேசமாகப் பேசி திருப்பியனுப்பிய எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவில் உற்சாக வெள்ளத்தில் மலர் மாலைகளை அக மகிழ்ச்சியோடு, புன்முறுவல் பொங்க ஏற்றுக்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி

பொதுக்குழு நடந்துகொண்டிருந்த அதே வேளையில் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். ஏற்கெனவே அங்கு கூடியிருந்த பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மண்டை உடைந்து, ரத்தம் பீறிட்டது. சுமார் ஒரு மணி நேரம் உள்ளே இருந்த ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆவணங்களைத் திருடிவிட்டதாக பழனிசாமி தரப்பு புகார் தெரிவித்தது. அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவத்தையே காரணமாக வைத்து ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களைக் கட்சியைவிட்டு நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழுவை ரத்து செய்யக் கோரியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வுசெய்ததைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மீண்டும் நீதிமன்றத்தை நாடியது்.

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்று 2022 ஆகஸ்ட் 17-ம் தேதி தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். ஜூன் 23-ம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டுமென்றும் தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ஓ.பி.எஸ் தரப்பு உற்சாகமடைந்தது. இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற அடையாளத்தை பழனிசாமி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்து, ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் செப்டம்பர் 2-ம் தேதி தீர்ப்பு வழங்கினர். அதற்குப் பிறகு அனைத்துத் தடைகளையும் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொன்றாக உடைத்தார்.

எடப்பாடி பழனிசாமி

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 6-ம் தேதி மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணை நிறைவடையும்வரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது. ஜனவரி 10, 11-ம் தேதிவரை இரு தரப்பும் அனல் பறக்க தங்களது வாதங்களை முன்வைத்தன. இதற்கிடையே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி அணிக்கே இரட்டை இலைச் சின்னமும் கிடைத்தது. இதனால் உண்மையான அ.தி.மு.க தாங்கள்தான் என எடப்பாடி பழனிசாமி அணி மக்கள் மத்தியில் துணிந்து பேசத்தொடங்கியது.

அ.தி.மு.க கிரீடத்தைச் சூட்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி

அனைத்துத் தரப்பும் பெரிதும் எதிர்பார்த்த அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 23-ம் தேதி வழங்கப்பட்டது. ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமடைந்தது. மறுநாள் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்தநாளோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் வரவேற்று கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி, மருத்துவ முகாமை தொடங்கிவைத்துக் கொண்டாடினார். எம்.ஜி.ஆர் மாளிகையின் அரியணை எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை உறுதிசெய்யும் வகையில், வேக வேகமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. “மார்ச் 18, 19 ஆகிய இரண்டு நாள்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம், மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுக்கள்மீது பரிசீலனை நடைபெறும், மார்ச் 26-ல் தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் 27-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று அந்தக் கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

எடப்பாடி – பன்னீர்

வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் முடியும்வரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்ததால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், தேர்தல் நடத்தவும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் நாடினார் ஓ.பன்னீர்செல்வம். `தேர்தலை நடத்தலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக் கூடாது’ என்று தடை விதித்தது நீதிமன்றம். அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் உற்றுநோக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் மூன்றாம் தலைமுறைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி அமரப் போகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இந்தத் தீர்ப்பு, இன்று (28.03.2023) வழங்கப்பட்டது. “பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம்” என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த மறு கணமே, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் எடப்பாடி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தார். “அ.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் வாழ்க” என்ற முழக்கம் எம்.ஜி.ஆர் மாளிகையில் விண்ணதிர ஒலித்தது. பூச்செண்டுகளையும், பரிசுகளையும் கொடுத்து எடப்பாடி பழனிசாமியை திக்குமுக்காட வைத்தனர். அதில் உச்சக்கட்டமாக எம்.ஜி.ஆர் அணிந்திருந்ததைப் போன்ற தொப்பி, கண்ணாடி முதலியவற்றை எடப்பாடி பழனிசாமிக்கும் அணிவித்து அழகு பார்த்தனர் அவரது ஆதரவாளர்கள்.

அந்தத் தொப்பியும் கண்ணாடியும் சாதாரணமானதல்ல… அ.தி.மு.க-வை தோற்றுவித்து, ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த அதிகாரம் மிக்க கிரீடம்… அந்த கிரீடத்தை எடப்பாடி பழனிசாமி நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சூட்டிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பின்னால் அரசியல் விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், அந்த இடத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள உறுதியோடு போராடியிருக்கிறார் என்பதே நிதர்சனம். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மேல்முறையீடு செய்திருக்கிறார்… ஆனால், இந்த நொடியில் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதை எவராலும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது என்பதை தனது போராட்ட குணத்தின் வாயிலாக நிரூபித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பதே நிதர்சனம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.