கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சுசீந்திரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜவுளிக்கடை வைத்துள்ளார்.
இந்தக் கடையில் நேற்று இரவு கொள்ளையர் புகுந்து கல்லாப் பெட்டியில் இருந்த பணம் மற்றும் துணிகளையும் திருடிச் சென்றுள்ளார். மறுநாள் கடைக்குச் சென்ற பிரபு கடையில் உள்ள கல்லாப்பெட்டித் திறந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னர் பிரபு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் படி, போலீசார் கடைக்கு விரைந்துச் சென்று அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த வீடியோவில் கடைக்குள் கொள்ளையடிக்கச் செல்லும் நபர் முகத்தில் முகக்கவசம், கையில் கிளவுஸ் மற்றும் தலையில் தொப்பி உள்ளிட்டவை அணிந்துள்ளார்.
இந்த சம்பவத்தை போலவே, மணக்குடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவர் வீட்டில் நடைபெற்ற திருட்டிலும் ஈடுபட்ட நபரின் உருவம் இதேபோன்று பதிவாகி இருந்ததனால் இரண்டு இடத்திலும் திருடியது ஒரே நபர் தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும்படி இருந்த சிறுவனைப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில், அந்த சிறுவன் தான் இரண்டு இடங்களிலும் கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும், அந்த சிறுவன் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் கைதாகி சிறார் கூர்நோக்கு சிறையில் இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த சிறுவனைக் கைது செய்து மீண்டும் சிறார் சிறையில் அடைத்தனர்.