வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, மார்ச் மாதம் பிற்பகுதியில் தொடங்கி மே மாதம் இறுதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் வேலூரில் நேற்று 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதனால் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்றும் வேலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டிய வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, வெள்ளரி, நுங்கு போன்றவற்றை அதிக அளவில் வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர். இதனால் வேலூரில் பல்வேறு இடங்களில் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.