புதுடெல்லி: அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு கட்டுப்படுகிறேன் என்று மக்களவை செயலகம் அனுப்பிய நோட்டீஸுக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2004-ல் அமேதி தொகுதியில் இருந்து மக்களவைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை எம்.பி. என்ற முறையில் அவருக்கு டெல்லியில் எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களா கடந்த 2005-ல் ஒதுக்கப்பட்டது. அப்போது முதல் ராகுல் அதில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், குற்றவியல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் அடிப்படையில் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டார்.
சிறை தண்டனை மற்றும் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஏப்ரல் 22-ம் தேதிக்குள் காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு மக்களவை செயலகம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அரசு பங்களா ஒதுக்கீடு ஏப்ரல் 24, 2023 முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த நோட்டீஸில் மக்களவை செயலகம் கூறியுள்ளது.
இதற்கு ராகுல் காந்தி நேற்று பதில் அனுப்பியுள்ளார். அவர் தனது பதிலில், “கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக, நான் இங்கு கழித்த காலத்தின் மகிழ்ச்சியான நினைவுகளுக்காக மக்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய உரிமைகளுக்கு எந்தவித பாதகமும் இன்றி உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களுக்கு நிச்சயமாக நான் கட்டுப்படுவேன்” என்று கூறியுள்ளார்.
அரசு விதிகளின்படி எம்.பி. ஒருவர் தனது பதவியை இழந்த ஒரு மாதத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒரு மாதம் சத்தியாகிரக போராட்டம்: இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி இழப்பு விவகாரத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்தப் போராட்டத்தை ஒரு மாதம் நடத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் தாலுகா, வட்டம், ஒன்றியம், மாவட்ட, மாநில அளவில் இப்போராட்டங்கள் நடைபெறும்’’ என்றார்.