சென்னை: விபத்துகள், விபத்து உயிரிழப்புகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உயர்த்தப்பட்ட அபராதத் தொகை தமிழகத்தில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் என அபராதம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீஸார் மட்டுமின்றி அந்தந்த பகுதி காவல்நிலைய போலீஸாரும் இந்த சோதனையில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் போக்குவரத்து போலீஸாரின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மது அருந்தாமல் வாகனம் ஓட்டிச்சென்ற ஒருவரை போலீஸார் மடக்கி, அவர் மது அருந்தியதாக கூறி அபராதம் விதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையை சேர்ந்தவர் தீபக். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை டிடிகே சாலை அருகே தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கண்காணிப்பு பணியிலிருந்த போலீஸார் மடக்கி, அவர் மது அருந்தியுள்ளாரா என்று ‘பிரீத் அனலைசர்’ கருவி மூலம் சோதனை செய்தனர்.
அதில், அவர் மது அருந்தி (45 சதவீதம்) இருந்ததாக காண்பித்தது. இதையடுத்து தீபக்குக்கு மது அருந்தி வாகனம் ஓட்டியதாக கூறி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான ரசீதை கொடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ரசீதை வாங்க மறுத்து, ‘தனக்கு மது குடிக்கும் பழக்கமே கிடையாது. நீங்கள் பரிசோதித்த கருவி சரியில்லை. என்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த பரிசோதனை செய்யுங்கள். நான் வரத் தயார். நீங்கள் வைத்திருப்பது டப்பா மிஷின். அதனால்தான் நான் மது அருந்தி உள்ளதாக மிஷின் பொய்யாக காட்டுகிறது’ என காவலர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
பதிலுக்கு காவலர்களும், அவருடைய வாதத்தை ஏற்காமல் வரம்பு மீறி நடந்துகொண்டனர். பதிலுக்கு நீங்கள் பொய் வழக்கு போடுவதாக தீபக் குற்றம் சாட்டினார். அரை மணி
நேரம் கழித்து மேலும் சில போலீஸார் புதிய பிரீத் அனலைசர் கருவியுடன் வரவழைக்கப்பட்டு, தீபக்கிடம் அடுத்தடுத்து இரண்டு முறை சுவாச சோதனை செய்யப்பட்டது. அதில், தீபக் மது அருந்தவில்லை என காண்பித்தது. அதன் பிறகே தீபக்கை போலீஸார் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
மது அருந்தாத ஒருவரை மது அருந்தியதாக கூறி போலீஸார் சிறைபிடித்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீஸாரின் அத்து மீறல் குறித்து பாதிப்புக்குள்னான தீபக், வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளியிட்டார். அதில், நான் மது அருந்தி இருப்பதாக கூறி, மிஷினை வைத்து இதுபோல் மோசடி செய்கின்றனர். எனவே, அனைவரும் விழிப்போடு இருங்கள்’ என அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் கூறும்போது, ‘`சென்னையில் 245 பிரீத் அனலைசர் கருவி உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட கருவி மூலம் நேற்று முன்தினம் மட்டும் 70 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவர் தீபக். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோன்று நிகழ்ந்திருக்கலாம். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். போலீஸார் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
போலீஸ் மீது வழக்கு தொடரலாம்: இதுதொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி.எஸ்.பார்த்தசாரதி கூறும்போது, “மோட்டார் வாகனச் சட்டம், 1988 பிரிவு 185, 202 சட்டத்தின்படி வாகனம் ஓட்டுபவரின் 100 மில்லிகிராம் இரத்தத்தில் 30 மில்லி கிராம் ஆல்கஹால் இருந்தால் போலீஸார் எவ்வித கைது வாரண்டும் இல்லாமல் அந்த வாகன ஓட்டியை கைது செய்து அபராதம் விதிக்க முடியும்.
அதேநேரம் குடிபோதையில் இல்லாத ஒருவர் மீது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக போலீஸார் பொய் வழக்குப்பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200 -ன்படி வழக்கு தொடர்ந்து, சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களின் கீழ் இழப்பீடும் கோர முடியும். அந்த அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கோரலாம்” என்றார்.வாகன ஓட்டி தீபக்கிடம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வாக்குவாதம் செய்யும் போலீஸார்.