நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் பற்களை பிடுங்கி ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் கொடுமைப் படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சம்பவம் தொடர்பாக விசாரிக்க உதவி ஆட்சியர் சபீர் தலைமையில் குழு அமைத்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
யார் இந்த பல்வீர் சிங்
இந்நிலையில் பல்வீர் சிங் குறித்த பின்னணி தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ராஜஸ்தான் மாநிலம் டோங் என்ற ஊரை சேர்ந்தவர். பல்வீர் சிங் தந்தை மத்திய அரசு ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை தனது சொந்த ஊரை ஒட்டியே முடித்துள்ளார். இதையடுத்து ஐஐடி மும்பையில் பி.டெக் மெக்கானிக்கல் எஞ்சினீயரிங் படித்திருக்கிறார்.
ஐபிஎஸ் பேட்ச்
அதன்பிறகு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை பார்த்து வந்தார். 5, 6 ஆண்டுகள் பணி அனுபவத்தை தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஆர்வம் காட்டுகிறார். இதற்காக தனியாக பயிற்சி எடுத்து கொண்டு 2020 ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியாக தேர்ச்சி பெறுகிறார். இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணை மண்டலத்தில் பயிற்சி ஏஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி
குற்றச் செயல்கள், போதைப் பொருட்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 200 கிலோ போதைப் பொருட்களை பல்வீர் சிங் ஐபிஎஸ் கைப்பற்றியுள்ளார். ஒரு துணை மண்டலத்தில் இவ்வளவு போதைப் பொருள் சிக்கியது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
சமூக ரீதியில் லாபி
காவல் உயர் அதிகாரிகள் ஓரிடத்தில் பணி நியமனம் செய்யப்படும் போது, அப்பகுதியை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தின் லாபி நடைபெறுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அம்பாசமுத்திரத்தில் பல்வீர் சிங் பணிக் காலத்தில் தேவர் சமூகத்தை சேர்ந்த வாசுதேவன் என்ற அதிகாரி மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
பண மோசடி
இவர் கல்லூரி மாணவ, மாணவிகளை வைத்து நடத்தப்பட்ட மராத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார். அதில் பல லட்ச ரூபாய் பண மோசடி நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி தகவலறிந்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், விசாரணை அதிகாரியாக பல்வீர் சிங்கை நியமித்துள்ளார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வாசுதேவன் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவருகிறது.
சிசிடிவி விவகாரம்
அவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த விஷயம் வாசுதேவனுக்கு தெரிந்ததும் தான் பல்வீர் சிங் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு சிசிடிவி கேமராக்களை சிலர் சமூக விரோதிகள் உடைத்ததாக புகார்கள் வந்துள்ளன. அவர்களை பிடித்து விசாரிக்கையில் தங்களை ஒன்று செய்ய முடியாது என்று திமிராக பேசியுள்ளார். அவர்கள் வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மாமா டெக்னிக்
இந்த சூழலில் தான் குற்றவாளிகள் மீது கெடுபிடி காட்ட பல்வீர் சிங் திட்டமிட்டுள்ளார். அதில் தான் பல்லை பிடுங்கி மாட்டிக் கொண்டார். பல்வீர் சிங்கின் மாமா ராஜஸ்தானில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவரது டெக்னிக் தான் பல் பிடுங்குவது. அதை சிறு வயது முதல் பார்த்து வந்த பல்வீர் சிங், அம்பாசமுத்திரத்தில் விசாரணையின் போது களமிறக்கி விட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 4 மாதங்களாகவே நடந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடைசியில் ஒரு சமூகத்திற்கும், ஏஎஸ்பிக்கும் இடையிலான மோதல் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது. எதையோ மறைக்க பல்வீர் சிங்கின் அதிரடி நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வந்திருப்பதாக கூறுகின்றனர். இருப்பினும் பல்வீர் சிங் ஐபிஎஸ் சட்டத்திற்கு உட்பட்டு தண்டனை வழங்கியிருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காது.