நெல்லையில் வடமாநில இளைஞரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை சினிமா பாணியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பணியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவில் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது வடமாநில இளைஞரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வடமாநில இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை தேடும் பணியையும் தீவிரப் படுத்தினர். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சார்பில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சினிமா பாணியில் மேலப்பாளையம் காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வடமாநில இளைஞரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர் இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட செல்வ கண்ணன், கண்ணன், முத்துக்குமார் ஆகிய மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு சிறார்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் வேறு ஏதேனும் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM