புதுடெல்லி: தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் தேர்தல் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கவும், கட்சியை நடத்தவும் தடை விதிக்கக் கோரிய வழக்கை வரும் மே மாதம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்கீல் அஸ்வினி உபாத்யாய் கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘தற்போது கொலை, கற்பழிப்பு, கடத்தல், பணமோசடி, கொள்கை, தேச துரோகம் போன்ற கொடூர குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் கூட அரசியல் கட்சியை தொடங்கி, அதன் தலைவராகவோ அல்லது நிர்வாக பொறுப்பாளராகவோ முடியும், எம்எல்ஏ, எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும். இதற்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தண்டனை காலத்தில் அரசியல் கட்சி தொடங்கவோ, அதை நடத்தவோ கூடாது என தடை செய்ய வேண்டும்’ என கூறி இருந்தார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 5 அல்லது 6ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென வக்கீல் உபாத்பாய் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப், நாகரத்னா ஆகியோர் அமர்வில் ஆஜராகி முறையிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் மே முதல் வாரம் வழக்கை விசாரிப்பதாக ஒத்திவைத்தனர்.