புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மன்னிப்பு கோரிய ராகுல், இப்போது தான் ஒரு கோழை இல்லை என்று கூறுகிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் எம்.பி. பதவியை இழந்த ராகுல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய பெயர் சாவர்க்கர் அல்ல. என் பெயர் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கோரமாட்டார்” என்றார்.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்க முயற்சித்த ராகுல் காந்தி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும் (ஓபிசி) அவ மதித்துள்ளார். இது தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இதற்குப் பிறகும் மன்னிப்புகோர மாட்டேன் என ராகுல் காந்தி கூறுகிறார். ஓபிசி சமூகத் திடம் மன்னிப்பு கேட்கும் மனப்பான்மையை அவரால் வளர்த்துக்கொள்ள முடியவில்லை என்பது, காந்தி குடும்பம் என்ற அரசியல் ஆணவத்தின் மற்றொரு வெளிப்பாடு ஆகும்.
சர்ச்சைக்குரிய வகையில் தான் தெரிவித்த கருத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஏற்கெனவே மன்னிப்பு கோரி உள்ளார். ஆனால் இப்போது தான் ஒரு கோழை இல்லை என்றும் மன்னிப்பு கோர முடியாது என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு ‘நாட்டின் காவலரே திருடராக உள்ளார்’ என பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியிருந்தார். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்பதைத்தான் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.