தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண்ணை கொன்று நிர்வாணமாக பானைக்குள் உடல் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55). இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இதில் சீனிவாசன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், செல்வமணி சம்பவத்தன்று திருச்செந்தூர் செல்வதாக அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து நேற்றுமாலை செல்வமணியின் மகள் ராஜலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்பொழுது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பித்தளை பானையில் அழுகிய நிலையில் தலைகீழாக செல்வமணி, நிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். மேலும் அந்தப் பானையின் மேல் ஒரு பாத்திரம் வைத்து மூடப்பட்டிருந்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், செல்வமணியின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த விசாரணையில் மர்ம நபர்கள் யாரோ செல்வமணியை கொலை செய்து, பானைக்குள் அடைத்து அதன் மேல் பாத்திரத்தை மூடி வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.