Vairamuthu Tweet About Vaali: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களுள் ஒருவர் வைரமுத்து. இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பிரபல பின்னணி பாடகி சின்மயி, மீ டூ இயக்கத்தின் மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனால், வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் பெரும் விவாதத்தை கிளப்பியது எனலாம்.
மேலும், இந்த குற்றச்சாட்டுகள் வலுத்த பின்னர், வைரமுத்து பல்வேறு முன்னணி படங்களில் பணியாற்றவேயில்லை. குறிப்பாக, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் ஆஸ்தான பாடலாசிரியராக இருந்த அவர், சமீபத்திய ஏஆர் ரஹ்மான் படங்களிலும் பணியாற்றவில்லை. மேலும், மணிரத்னம் – ஏஆர் ரஹ்மான் – வைரமுத்து கூட்டணியில் பல்வேறு ஹிட் பாடல்கள் தமிழ் திரையிசை பாடல்களின் வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன.
இருப்பினும், சமீபத்தில் ‘மணிரத்னம் – ஏஆர் ரஹ்மான்’ கூட்டணியில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் வைரமுத்து பணியாற்றவில்லை. இதுபெரும் சர்ச்சையை உண்டாக்கியது. வைரமுத்து வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்தாலும், ஏஆர் ரஹ்மான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடைய படங்களில் ஒதுக்கப்பட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும், பொன்னியின் செல்வன் முதல் பாகம் பாடல் வெளியீட்டில் கூட வைரமுத்துவை படக்குழு தார்மீக ரீதியாக கூட அழைக்கவில்லை எனவும் கூறப்பட்டது. அந்த வகையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது, அதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. மேலும், இதிலும் வைரமுத்துவிற்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என தெரிகிறது.
வைரமுத்து ட்வீட்
இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து இன்று காலை பரபரப்பான ட்வீட் ஒன்று கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார். அதில்,”கமல் இருக்கும் வரை ரஜினிக்கும், ரஜினி இருக்கும் வரை கமலுக்கும்; விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும், அஜித் இருக்கும் வரை விஜய்க்கும்; ஒரு பிடிமானம் இருக்கும்; எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே; காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
கமல் இருக்கும் வரை
ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை
கமலுக்கும்விஜய் இருக்கும் வரை
அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை
விஜய்க்கும்ஒரு பிடிமானம் இருக்கும்
எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு
போய்விட்டீர்களே
வாலி அவர்களேகாற்றில் கத்தி சுற்றிக்
கொண்டிருக்கிறேன்— வைரமுத்து (@Vairamuthu) March 29, 2023
வைரமுத்து தனது சக பாடலாசிரியரான வாலியை குறிப்பிட்டு இன்று இதனை வெளியிட்டுள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இன்று வாலியின் பிறந்தநாளும் இல்லை, நினைவுநாளும் இல்லை. திடீரென வைரமுத்து இந்த ட்வீட்டை பதிவிட்டதன் காரணம் பலருக்கும் புரியவில்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஒரு சிலரோ இந்த திரையுலகில் தனக்கிருந்த பிடிமானம் போய்விட்டது என்பதை வைரமுத்து வருத்தத்துடன் தெரிவிப்பதாகவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று பொன்னியின் செல்வனின் பாடல் வெளியீட்டு விழா இருக்கும் சூழலில், வைரமுத்துவின் இந்த ட்வீட் திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.