கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கர்நாடகாவில் 2018-19ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை வாக்காளர்கள் 9.17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் அனைவரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
வரும் மே 25ஆம் தேதி உடன் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 5,21,73,579 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 58,282 வாக்குச்சாவடிகள் மூலம் வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் வசதி முதல்முறை ஏற்படுத்தி தரப்படும். அந்த பட்டியலில் தற்போது 12.15 லட்சம் பேர் இருக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வ.எண்தேர்தல் அறிவிப்புகள்தேதி1வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள்ஏப்ரல் 132வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்ஏப்ரல் 203வேட்புமனுக்கள் மீது பரிசீலனைஏப்ரல் 214திரும்பப் பெற கடைசி நாள்ஏப்ரல் 245இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடுஏப்ரல் 246வாக்குப்பதிவுமே 10 (புதன்)7வாக்கு எண்ணிக்கைமே 13 (சனி)8தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாள்மே 15
வாக்கு சதவீதம் சரிவு
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 1,320 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகள் உறுதி செய்யப்படும். பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு நகர்ப்புறம் ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் குறைந்தபட்ச வாக்குகளை பதிவு செய்துள்ளன.
மொபைல் ஆப் வசதி
இங்கு வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்தும் வகையில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வாக்காளர்களின் குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையத்தின் KYC மொபைல் ஆப் மற்றும் affidavit.eci.gov.in இணையதளம் ஆகியவற்றில் இடம்பெறும். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை அளிக்க cVigil மொபைல் ஆப்பை பயன்படுத்தலாம்.
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு
ஒவ்வொரு புகாருக்கும் அடுத்த 100 நிமிடங்களில் உரிய பதில் அளிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். இதுதவிர பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதன்படி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி, ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா, உத்தரப் பிரதேச மாநிலம் சான்பே மற்றும் சூவர், மேகாலயா மாநிலம் சோயியாங் ஆகிய 5 தொகுதிகளில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.