ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் சஸ்பெண்ட்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்தில் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டவர் பல்வீர் சிங் ஐபிஎஸ். இவர் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அடுத்தகட்டமாக பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து முதல்வர்

உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் விளக்கம்

இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று விளக்கம் கொடுத்த மு.க.ஸ்டாலின், குற்றச் செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தது. உடனடியாக சேரன்மாதேவி சார் ஆட்சியர், உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

ஏஎஸ்பி பணியிடை நீக்கம்

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது. அந்த வகையில் விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிமுக பிரமுகர் கொலை

திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதி மோதல், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் கொலை சம்பவம் தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில்,

என்ன காரணம்?

கொலையுண்ட இளங்கோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சஞ்சய் என்பவரை பொது வெளியில் வைத்துத் தாக்கியதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் இந்தக் கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதும் தெரிய வந்தது. காவல் துறையினர் இரவோடு இரவாக இரண்டு மணி நேரத்தில் வழக்கில் தொடர்புடைய சஞ்சய், கணேசன், கவுதம், வெங்கடேசன், அருண்குமார் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள்.

அதிமுக vs திமுக ஆட்சி

இவர்களில் ஒருவர் இளஞ்சிறார் குற்றவாளி. மேலும் கொலை செய்யப்பட்ட இளங்கோ, போதைப் பொருளுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் கூறினார். மேலும் பேசுகையில், 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 1,670 கொலை சம்பவங்கள் நடந்தன. 2022 திமுக ஆட்சியில் 1,596ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

ஆண்டு ஒன்றுக்கு 74 கொலைகள் இந்த ஆட்சியில்தான் குறைக்கப்பட்டுள்ளன. அப்படிச் சொல்வதை விட அது தடுக்கப்பட்டிருக்கிறது. நமது ஆட்சியைப் பொறுத்தவரை காவல் துறை சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அதில் எந்தவிதமான பாரபட்சமோ, அரசியலோ எதுவும் பார்க்காமல், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.