புதுக்கோட்டையில் மின்வாரியத்தில், உதவி மின் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் ரகுநாதன் (50). இவர், தனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்கக் கோரி, தனது உயரதிகாரிக்கு கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்த்த உயரதிகாரி, அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார். ரகுநாதன் அந்தக் கடிதத்தில், “வாரியத்தாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் நடத்தப்படும் விதம் குறித்து, நான் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்.
அதிலிருந்து, மீண்டு வந்து வாரியப் பணிகளை செவ்வனே தொடரும் வகையில் மன அமைதி வேண்டி, எனது வீட்டிலேயே அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்துக்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன். ஆகவே, எனக்கு ஒரு நாள் விடுப்பு தாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை பார்த்து அதிகாரி அதிர்ச்சியடையாமல் இருப்பது தான் ஆச்சரியம்..
உடனே, சுதாரித்துக் கொண்ட அந்த உயர் அதிகாரி, இதுபோன்ற காரணங்களுக்கு எல்லாம், விடுப்பு தர முடியாது, வாரிய சட்டத்தில் இடமில்லை எனக் கூறி விடுப்பு விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார்.
மின்சார வாரிய ஊழியர் ஒருவர், தனது உயர் அதிகாரியிடம் கொடுத்த விநோத விடுப்பு கடிதம், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.