கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலை பள்ளி முடிந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பேருந்தில் மாணவியின் இருக்கையின் பின்னால் அமர்ந்திருந்த விளந்தை பகுதியை சேர்ந்த கட்டிடம் மேஸ்திரி செந்தமிழ்ச்செல்வன் (35) என்பவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவி தாயிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.