நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் 130-வது ஆண்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “130 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்குக் கல்வி கொடுத்த இந்த நிறுவனத்தை வாழ்த்துகிறேன். நாம் நம் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னொரு மொழியையும் கற்றுக்கொண்டால் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். நீங்கள் கவர்னரானதன் ரகசியம் என்ன என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு மூன்று ரகசியங்கள் இருக்கின்றன எனச் சொல்லி, அது `உழைப்பு, உழைப்ப, உழைப்பு’ என்றேன். உழைப்பதற்கு குறுக்கு வழி இல்லை. `நீ கோல்டு மெடல் வாங்கியதற்கு அப்பா, அம்மா, ஆசிரியர் ஆகியவரில் யாருக்கு நீ நன்றி சொல்வாய்?’ என ஒரு மாணவரிடம் கேட்டால், `கூகுளுக்கு நன்றி சொல்வேன்’ என்கிறார். கொரோனாவுக்கு முன்பு பெற்றோர் ஸ்கூலுக்குப் போனால் மாணவன் பற்றி ஆசிரியர் குறைச்சொல்லிக்கொண்டே இருப்பதை பார்த்து சிலருக்கு வருத்தம் ஏற்பட்டது. ஆனால், கொரோனா நேரத்தில் வீட்டில் பிள்ளைகளைச் சமாளிக்க முடியாமல் இருந்த சமயத்தில் பெற்றோருக்கு ஆசிரியரின் கஷ்டம் புரிந்தது. அப்துல் கலாம் சொன்னார் ‘நாம் தூங்கும்போது வருவது கனவு அல்ல… நம்மை தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு’ என்று. பெற்றோரின் தியாகம் நம்மை இவ்வளவு உயர்த்தியிருக்கிறது. வருங்காலத்தில் நம் நாடு எவ்வளவு முன்னேறப் போகிறது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். நம் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களும், விஞ்ஞானிகளும்தான் காரணம். நான் சாதனையாளராக மாறுவேன் என்ற சபதத்தை மாணவர்கள் எடுக்கவேண்டும்” என்றார்.
இதற்கிடையே மணவி ஒருவர் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம், `நீங்கள் சாதிக்க கடின முயற்சி செய்தீர்கள், அது தவிர வேறு என்னென்ன சவால்களைச் சமாளித்தீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், “பெண் என்றாலே சவாலை சமாளித்துதான் ஆக வேண்டும். அதிலும் அரசியல் கட்சித் தலைவராக அதைவிட அதிகமாக சவாலை சமாளித்துதான் ஆக வேண்டும். நான் எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறேன். நன்றாக மேடையில் பேசுவேன், நன்றாக கவிதை எழுதுவேன், ஆனால் அதையெல்லாம் பற்றி பேசமாட்டார்கள். `நீ கறுப்பாக இருக்கிறாய், குள்ளமாக இருக்கிறாய், சுருட்டையாக இருக்கிறாய்..’ என கிண்டல் செய்தார்கள். பாடி ஷேமிங் இருக்கும். அடிக்க அடிக்க எழும் பந்தைபோல நாம் எழவேண்டும். நீ என்ன வேண்டுமானாலும் சொல் நான் எழுவேன் என எழுந்து நிற்க வேண்டும். பெண் என்றால் பரிகசிப்பார்கள். நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. பெண் என்றால் ஆணுக்கு நிகர் என்பது இல்லை, ஆண்களைவிட அதிகமாக எங்களால் முடியும் என்பதை காட்ட வேண்டும்.
உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கொரோனா ஆரம்பித்த 11 மாதங்களில் நம் இந்தியா தடுப்பூசி கண்டுபிடித்து. நான் மருத்துவக் கல்லூரி மாணவியாக இருக்கும்போது, வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி கிடைக்காதா என ஏங்கியிருக்கிறேன். இப்போது நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை போட்டுக்கொண்டதில் பெருமை கொள்கிறேன். `இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் 5 ட்ரில்லியன் எகானமிக் கொண்டுவருவேன்’ என பிரதமர் கூறியிருக்கிறார். கணியன் பூங்குன்றனாரின் `யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தலைப்பில் நாம் ஜி 20 மாநாட்டை நடத்துவது பெருமை.
பள்ளி கல்லூரிகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் திறமையானவர்கள். தங்கள் திறமை என்னவென்று தெரியாமல் கடைசி பெஞ்சில் இருப்பார்கள். அவர்களை அழைத்துப் பயிற்சி கொடுத்தால் முதல் பெஞ்ச் மாணவர்களை விஞ்சுவார்கள். எனவே ஆசிரியர்கள் முதல் பெஞ்ச் மாணவர்களிடமே கேள்வி கேட்காமல் கடைசி பெஞ்ச் மாணவர்களிடம் கேள்வி கேளுங்கள். நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம், மகிழ்ச்சியாக இருக்க பிறந்திருக்கிறோம். எனவே கூடுதலாக ஒரு மணிநேரம் படியுங்கள். அதைவிட கூடுதலாக எதையாவது கற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “புதுச்சேரியைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்திருப்பது பற்றி முடிவு எடுக்கும் நிலையில் நான் இல்லை. உங்கள் சகோதரியாக, புதுச்சேரி ஆளுநராக சிறப்பாகப் பணியாற்றி வருகிறேன். முதல்வர் ரங்கசாமியுடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறேன். நல்ல ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.