புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதன்கிழமை (மார்ச் 29) தெரிவித்தார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கர்நாடகா தேர்தல் தொடர்பாக புதன்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் அளிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “அது பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்” என்றார்.
கடந்த ஆண்டு குஜராத்தில் நடந்த தேர்தலில், அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 13 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் தேசியக் கட்சியாக மாறும் தகுதியினைப் பெற்றது.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வரலாற்றில் கடந்த ஆண்டு ஒரு குறிப்பிடத்தகுந்த ஆண்டாகும். பஞ்சாப் தேர்தலில் வென்றதன் மூலம், டெல்லியைத் தொடர்ந்து அக்கட்சி இரண்டாவது மாநிலத்திலும் ஆட்சி அமைத்தது. டெல்லி உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெரும்பான்மையை பெற்றதன் மூலம் 15 ஆண்டுகால பாஜகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆச்சரியப்படும் வகையில் தனது செல்வாக்கை காட்டியது. இதன் மூலம் தேசியக் கட்சியாக மாறும் தகுதியினைப் பெற்றது. குஜராத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தேர்தல் சின்னங்கள் (பதிவு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவு 1968-ன் படி, ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட அந்த கட்சி நான்கு மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த மாநிலத்தில் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். அதேபோல, ஓர் அரசியல் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற, அந்த மாநிலத்தில் 6 சதவீத வாக்குகளுடன், இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அக்கீகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. கோவாவில் இரண்டு இடங்களில் வென்ற ஆம் ஆத்மி கட்சி மொத்தமாக 6.77 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இறுதியில், 2022-ம் ஆண்டில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தகுந்த போட்டியை ஏற்படுத்து 5 இடங்களில் வெற்றி பெற்று தேசியக் கட்சி கனவினை எட்டியது.
வரும் 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக, மோடிக்கு எதிராக களமிறங்க நினைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் மிகவும் முக்கியமான என்பது குறிப்பிடத்தக்கது.