`நடுத்தர குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை கிடைக்காதா?' – முதல்வர் விளக்கமும், பின்னணியும்!

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க சார்பாக தொலைநோக்குத் திட்டமாகக் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் வென்று ஆட்சி அமைத்து, அறிவிக்கப்படாத சில திட்டங்களை தி.மு.க அரசு நிறைவேற்றிய பிறகும், அறிவித்த திட்டமான உரிமைத்தொகையைக் கொடுக்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் விமர்சனமாகயிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ஈரோடு இடைத்தேர்தலின்போது, முதலமைச்சரே `இந்தத் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்’ என அறிவித்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட்டிலும், `வரும் செப்டம்பர் அண்ணா பிறந்தநாளன்று திட்டம் தொடங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், பல சந்தேகங்களுக்குத் தொடக்கப்புள்ளியாகவும் மாறியிருக்கிறது.

திமுக தேர்தல் வாக்குறுதி – உரிமைத்தொகை

குறிப்பாக, இந்தத் திட்டத்துக்கு பட்ஜெட்டில் அரசு ஒதுக்கியிருக்கும் நிதியின்படி செப்டம்பர் முதல் அடுத்த நிதியாண்டு மார்ச் வரையிலான 7 மாதங்களுக்கு ரூ.1,000 தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு கோடிக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்பது உறுதியாகிறது. இதனால், தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததுபோல, அனைத்துக் குடும்பத்தலைவிகளுக்கும் திட்டம் கிடையாது. மிகவும் அவசியம் உள்ளவர்களுக்கு மட்டும் நிதி உதவி அளிக்கப்படும் என்பதாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ரூ.1,000 உரிமைத்தொகை

மார்ச் 27-ம் தேதி சட்டப்பேரவையில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, “உரிமைத்தொகை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை மனம் திறந்து பாராட்டுகிறேன். ஆனால், அதே வேளையில், அது அனைத்து வகையான குடும்பத்தலைவிகளுக்கும் சென்று சேருமா?” என்னும் கேள்வியை முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இந்த அவையிலும், வெளியிலும், பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் உரிமைத்தொகை திட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள், விமர்சனங்கள், பாராட்டுகள், புகழ்ந்துரைகள் தொடர்ந்து பேசப்பட்டும், முன்வைக்கப்பட்டும் வருகின்றன. அதற்கெல்லாம் விளக்கமளிப்பது என் கடமையென கருதுகிறேன்” எனப் பேசினார்.

சட்டசபை

தொடர்ந்து பேசிய முதல்வர், “வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள் என்பதற்கு ஊதியம் கணக்கிட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமானப் பங்கு பெண்களுக்குச் சட்டம் இயற்றாமலேயே கிடைத்திருக்கும். ஒவ்வொரு நலத்திட்டத்தின் நோக்கமும், தேவையானவர்களுக்குத் தேவையான உதவியை வழங்க வேண்டும் என்பதே. ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஒரு கனவு இல்லம் அமைத்துத் தருவதும், ‘அனைவருக்கும் நிலம்’ என்றொரு திட்டம் என்றால், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் நிலம் சொந்தமாக வழங்குவதும், ‘முதியோர் ஓய்வூதியம்’ என்றால், ஆதரவற்ற முதியோரின் நலன் காப்பதும் ஆகும். அதே போல, அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பதுதான் பொருள். அந்த வகையில் பெண்களுக்கு உரிமைத்தொகை என்பது நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என உழைக்கும் பெண்களுக்கே சென்றடைய வேண்டும்” என்றார்.

ஸ்டாலின்

முதலமைச்சரின் இந்த விளக்கத்தையும் பார்க்கும்போது, நலத்திட்டத்தின் சாராம்சம் தெரிகிறது. ஆனால், தேர்தலில் குறிப்பிட்ட அறிவிப்பாக இது இருக்கிறதா என்பதே பலரின் கேள்வியாகயிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில், ’குடும்பத்தலைவிகளுக்கு’ எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது, `உழைக்கும் குடும்பப் பெண்கள்’ என மாற்றப்பட்டிருக்கிறது. இதில் நடுத்தர குடும்பப் பெண்களையும் கண்டறிந்து திட்டத்தில் இணைப்பார்களா என்னும் கேள்வியை மூத்தப் பத்திரிகையாளர் பிரியனிடம் முன்வைத்தோம்.

நம்மிடம் பேசிய அவர், “வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே திட்டம் போய் சேர வேண்டும் என்பதில் தி.மு.க அரசு கவனமாகயிருக்கிறது. ஒருவேளை, வீட்டிலுள்ள பெண்ணின் கணவர் சிறிய கடை வைத்திருந்து, குறைந்த வருமானம் ஈட்டுபவராக இருக்கலாம். அதைக் கருத்தில்கொண்டு அவர்களையும் இணைப்பார்களா.. என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல், சொந்த வீட்டிலிருந்து கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள், வாடகை வீட்டில் இருந்து நல்ல நிலையிலும் இருக்கிறார்கள். இவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதிலும், தரவுகளைச் சேகரிப்பதிலும் அரசுக்குத் தடுமாற்றம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்தப் பயனாளிகளைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாகவே இருக்கும்.

பிரியன்

`வாக்கு வாங்க வேண்டும்’ என்னும் நோக்கத்தில் திட்டத்தை அறிவித்துவிட்டார்கள். ஆனால், நிதிநிலையைக் காரணம் காட்டி பயனாளிகளைச் சுருக்க நினைக்கிறார்கள். ’சுருக்கப்படும் பயனாளர்களால்’ தி.மு.க அரசுமீது அதிருப்தி உண்டாகும். குறிப்பாக, தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்துப் பேச வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, திட்டம் போய் சேரும் ஒரு கோடி பெண்கள் மட்டும் வாக்களித்தால்போதும் என நினைக்கிறார்களோ… என்னவோ…. அ.தி.மு.க பக்கம் இருக்கும் பெண்கள் வாக்குகளை இவர்கள் பக்கம் இழுக்க நினைத்துதான் தொடர்ந்து பெண்களுக்குப் பேருந்தில் இலவசம், உயர்க்கல்வி உதவித்தொகை, தற்போது உரிமைத்தொகையை அறிவித்தார்கள். ஆனால் புதிய கட்டுப்பாடுகள் விதித்து உரிமைத்தொகை திட்டத்தை அமல்படுத்தினால் விமர்சனம் எழும். அதை சரிசெய்ய பொதுவாக அனைவரும் பயன்பெறும் காஸ் மானியம், ஒரு மாத மின்கட்டணம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தால் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.