கொல்கத்தா: மனைவி தொடுத்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான கைது வாரண்ட் தடையை நீக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி – அவரது மனைவியான மாடல் அழகி ஹசின் ஜஹான் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு இருந்தது. முகமது ஷமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக ஹசின் ஜஹான் குற்றம்சாட்டினர். இவ்விவகாரம் தொடர்பாக 2018ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி, ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் ஹசின் ஜஹான் புகாரளித்தார். அதையடுத்து முகமது ஷமிக்கு எதிராக ஐபிசி பிரிவு 498ஏ, 354 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது.
இவ்வழக்கை அலிபூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரணை நடதியது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், முகமது ஷமி மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அலிப்பூரில் செஷன்ஸ் நீதிபதியிடம் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முகமது ஷமிக்கு எதிரான கைது வாரண்டிற்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முகமது ஷமிக்கு எதிராக அலிபூர் செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் உத்தரவு மீதான தடையை உறுதி செய்துள்ளது. மேலும், கைது வாரண்ட் தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.