யு.பி.ஐ மூலமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு பலரும் யு.பி.ஐ மூலம் தான் கட்டணம் செலுத்துகின்றனர். சில்லறை வியாபாரம் துவங்கி மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் வரை, பலரும் யுபிஐ மூலம் தான் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதற்காக கூகுள்பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் யு.பி.ஐ பயன்படுத்தி ரூ. 2000க்கு மேல் வணிகப் பரிவர்த்தனைகளை செய்தால் 1.1% கட்டணம் வசூலிக்க தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டணம் துறைக்கு ஏற்ப மாறுபடும்.
அரசு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு, ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணம் வசூல் செய்யப்படும். வேளாண்மை, டெலிகாம் துறைகளுக்கு குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படும். மேலும் பல்பொருள் அங்காடிகளுக்கு 0.9 சதவீதம் கட்டணம், அஞ்சலகம், கல்வி, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதம் கட்டணம், எரிபொருள் பயன்பாட்டுக்கு 0.5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
நமது நாட்டில் யு.பி.ஐ மூலமாக பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை 250 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. அவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வணிகரிகளின் எண்ணிக்கை 5 கோடியாகும். அடுத்த 4 ஆண்டுகளில் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகள் 16% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்காரணமாக யு.பி.ஐ பயன்பாட்டுக்கு என்று கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என பேடிஎம் தெரிவித்துள்ளது.. Paytm வாலட் மூலம் UPI மூலம் பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக பணம் கட்ட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.