சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியுள்ளார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 18-ம் தேதி முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
தலைநகர் டெல்லியில் தலைப்பாகை இன்றி டெனிம் ஜாக்கெட், கூலிங்கிளாஸ் அணிந்தவாறு அவர் நடந்துசெல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது.
இந்நிலையில் அம்ரித்பால் சிங் நேபாளத்துக்கு தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பாக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செயல்படும் இந்திய தூதரகம் சார்பில் அந்நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், “இந்தியாவில் தேடப்படும் நபரான அம்ரித்பால் சிங் தற்போது நேபாளத்தில் பதுங்கியுள்ளார். இந்திய பாஸ்போர்ட் அல்லது வேறு நாடுகளின் போலி பாஸ்போர்ட் மூலம் நேபாளத்தில் இருந்து வேறு நாட்டுக்கு அவர் தப்பிச் செல்ல முயற்சி செய்யக்கூடும். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை நேபாள அரசு அனுமதிக்கக்கூடாது” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து நேபாள போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “நேபாளத்தின் மேற்குப் பகுதியில் அம்ரித் பால் பதுங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்” என்றனர்.
போலீஸ் காவலில் அம்ரித்பால்?: பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் அம்ரித்பால் சிங் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அம்ரித்பால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “பஞ்சாப் போலீஸ் காவலில் அம்ரித்பால் சிங் உள்ளார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த பஞ்சாப் அரசின் அட்வகேட் ஜெனரல் வினோத் கூறும்போது, “அம்ரித்பால் சிங்கை தீவிரமாக தேடி வருகிறோம். அவர் தரப்பு வழக்கறிஞர், ஆதாரமின்றி பொய் புகாரை கூறுகிறார்” என்று தெரிவித்தார்.
இறுதியில் நீதிபதி ஷெகாவத் கூறும்போது, “பஞ்சாப் போலீஸ் காவலில் அம்ரித்பால் சிங் இருப்பதற்கான ஆதாரத்தை அளித்தால் விசாரணை நடத்தப்படும்” என்று உறுதி அளித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 400 பேரை பஞ்சாப் போலீஸார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 100 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு சீக்கிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.