சென்னை: “குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition. குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுக்களில் “தாஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, “தயிரை ‘தாஹி’ என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்தத் தவறு அல்ல; திட்டமிடப்பட்ட இந்தித் திணிப்பு, இந்தி மொழியை தமிழர்களிடம் திணிப்பதில் இது ஒரு புதிய உத்தி என வெளிப்படையாக குற்றஞ்சாட்டுகிறேன்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வாசிக்க > “ஆவின் தயிரை ‘தாஹி’ என்று அழைக்க கட்டாயப்படுத்தியது திட்டமிட்ட இந்தித் திணிப்பு” – ராமதாஸ் குற்றச்சாட்டு