தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் மிக முக்கியமான தலமாக இருப்பது பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். கோடை காலத்தில் நடக்கும் பங்குனி உத்திரத்தின்போது முருகப்பெருமானை குளிர்விக்கும் விதமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்துவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உபகோயிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்தர விழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டும் நிகழ்வு நடந்தது. இன்று முதல் தொடர்ந்து 10 நாள்கள் நடக்கும் விழாவில், தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானையுடன் எழுந்தருள வீதிஉலா நடக்கும். இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 3-ம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானை திருக்கல்யாணமும், அன்றைய தினம் இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கும். ஏப்ரல் 4 -ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும், ஏப்ரல் 7-ம் தேதி கொடி இறக்குதலுடன் திருவிழாவும் நிறைவு பெறும்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தைப்பூசத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கும் வழக்கத்தை விட பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளைப் பழநி கோயில் மற்றும் நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.