கர்நாடக தேர்தல் : பா.ஜ.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சி

பெங்களூரு

கர்நாடகாவில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குறித்து பட்டிதொட்டியெல்லாம் தெரியும். அந்த அளவுக்கு கர்நாடகத்தில், பெல்லாரி பகுதியில் சுரங்கத்தொழிலில் பெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். 2016-ல் மகளுக்கு, 650 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்து, நாட்டையே அதிரச்செய்தவர்.

கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.கவில் இருக்கும் ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரி பகுதியில், 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜ்க்கு தீவிர ஆதவராக களத்தில் நின்றவர்.

அதன்பின், இந்த 20 ஆண்டுகளில், பா.ஜ.கவின் மேலிடத்தில் அமித் ஷா உள்பட பல தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுடன், பெரும் பணபலம், சமூக வாரியான ஆதரவு என, கர்நாடக அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாதவராக உள்ளார். இவரின் வரவுக்குப்பின் தான், கர்நாடக தேர்தல் களத்தில் அதீத அளவு பணப்புழக்கம் ஏற்பட துவங்கியது என்ற பேச்சும் உண்டு.

கர்நாடகத்தில் நடந்த மாபெரும் சுரங்க ஊழல், நிதி மோசடி வழக்குகளில் தொடர்பில் இருந்ததற்காக, மத்திய குற்றபுலனாய்வுத்துறை அதிகாரிகள் இவர் மீது வழக்கு பதிவு செய்தபோது தலைமறைவானார். பின், நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ‘சுரங்க மாபியா, கனிமவள மாபியா’ என, அனைத்து கட்சியினராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

‘ஜனார்த்தன ரெட்டியின் ஊழல்களை பா.ஜ.க ஆதரிக்கிறது,’ என, எதிர்க்கட்சிகள் பேசி வருவதால், கடந்த சில ஆண்டுகளாக அமித் ஷா, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை என, பா.ஜ.கவினர் இவருடனான நட்பை குறைத்துவிட்டனர்.

‘தனக்கு கட்சியில் போதிய செல்வாக்கு இல்லை,’ என, தனது சகாக்களிடம் நீண்ட நாட்களாகவே ஜனார்த்தன ரெட்டி கூறி வந்த நிலையில், இவரை சமாதானப்படுத்த இவரது நண்பரும் தற்போதைய பா.ஜ.க போக்குவரத்து துறை மந்திரியுமான ஸ்ரீராமலு முயற்சித்தும் பயன் இல்லை. இந்த நிலையில், பா.ஜ.க–வுடனான தனது, 20 ஆண்டுகால உறவை முறித்த ஜனார்த்தன ரெட்டி, ‘கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா – கே.பி.பி.ஆர்’ என்ற தனிக்கட்சி தொடங்கி உள்ளார்.

முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சியால் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் ஜனார்த்தன ரெட்டி தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். சுமார் 50 தொகுதிகளை குறிவைத்து அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

கர்நாடகா கல்யாண் பிரகதி பக்சா சார்பில் 12 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஜனார்த்தன ரெட்டி வெளியிட்டுள்ளார். இதுதவிர கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டியும், அவரது மனைவி லட்சுமி அருணா பல்லாரி தொகுதியிலும் களமிறங்க உள்ளனர். பல்லாரி தொகுதியில் தற்போது பா.ஜ.க. சார்பில் ஜனார்த்தன ரெட்டியின் உடன்பிறந்த சகோதரர் சோமசேகர ரெட்டி எம்எல்ஏவாக உள்ளார். மீண்டும் அவர் அங்கு போட்டியிடும் நிலையில் ஜனார்த்தன ரெட்டி தனது மனைவி லட்சுமி அருணாவை அங்கு வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளது. இதுபற்றி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டியின் கட்சிக்கு கால்பந்து சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்னணி பற்றி ஜனார்த்தன ரெட்டி விளக்கி உள்ளார். இதுபற்றி ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ‛‛முந்தைய காலத்தில் எனது நண்பர்கள், எதிரிகள் என அனைவரும் என்னை கால்பந்து போல் உதைத்து பயன்படுத்தி கொண்டனர். இதனால் கால்பந்தை வைத்து அவர்களின் அரசியலில் விளையாட உள்ளேன்” என கூறினார்.

பல்லாரி, கொப்பல், பீதர், யாதகிரி, ராய்ச்சூர், கலபுரகி, விஜயநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கவனம் செலுத்த உள்ளார். மேலும் தேர்தல் வாக்குறுதிகளாக ஜனார்த்தன ரெட்டி கட்சி சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு வீட்டுக்கு 250 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கு இலவச வீட்டுமனைகள், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வசதி, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1000 சம்பளம் உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சி பா.ஜ.க.வுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் தற்போது பா.ஜ.க. ஆட்சி நடக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி வியூகங்கள் வகுத்து வருகிறது. இதற்கிடையே தான் பா.ஜ.க. மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்துள்ளது.

இது பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டியின் செயல்பாடும் பா.ஜ.க.வுக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. அதாவது ஜனார்த்தன ரெட்டிக்கு ஐதராபாத்-கர்நாடகா பிராந்தியத்தில் செல்வாக்கு உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் அவர் பிரிக்கும் ஓட்டுக்கள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.