கேடிசி நகர்: பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சிகளை ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர். கணவரின் குடிப்பழக்கத்தால் குடும்பப் பெண்கள் படும் அவதிகள், ஆண்களின் அலட்சியத்தால் ஏற்படும் சாலை விபத்துகள், சூதாட்டத்தின் விளைவுகள், பஸ் நிலையங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள், குழந்தை திருமணம் என பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் நிலை காட்சிகளாக ‘தத்ரூபமாக’ நடித்துக் காட்டினர். இந்த நிலைக் காட்சிகள் பள்ளி, கல்லூரி மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
மாணவிகள் ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, சூரியகாந்தி மற்றும் லில்லி என 5 குழுக்களாக பிரிந்து இந்த நிலைக் காட்சியை நடத்தினர். இந்த நிலைக் காட்சியினை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். சர்வதேச ரோட்டரி மாவட்ட கவர்னர் முத்து முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் ஜெம்மா, முதல்வர் வசந்தி மெடோன ஆகியோரது வழிகாட்டுதலின்படி நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியைகள் கிளாடிஸ் ஸ்டெல்லா, லில்லி மரிய பிரவீனா, ஜெபஷீலா ஜெனிபர், வெண்ணிலா சாந்த ரூபி, ஸ்டெல்லா ராஜகுமாரி, ஜானி தீபா ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்களின் முன்னேற்றமே சமுதாய முன்னேற்றத்திற்கான வழி என்னும் கருத்தை மையமாக கொண்டு நிலைக்காட்சிகள் அனைத்தும் அமைக்கப்பட்டிருந்தன.