சென்னை கே.கே.நகர், முனிசாமி சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இருக்கிறது. இந்த ஏடிஎம் மையத்தின் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க இளைஞர் ஒருவர் முயற்சி செய்தார். இந்தச் சம்பவத்தை சிசிடிவி மூலம் ஹைதரபாத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்த்த வங்கியின் அதிகாரிகள், உடனடியாக சென்னை கே.கே நகர் காவல் நிலையத்துக்கு போனில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள ரோந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ரோந்து போலீஸார் சென்றனர்.
போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர், தப்பி ஓடிவிட்டார். ஏடிஎம் மையத்துக்குள் போலீஸார் சென்று பார்த்தபோது அங்கு பெரிய கல் ஒன்று கிடந்தது. இதையடுத்து போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அதில் இளைஞர் ஒருவர் பெரிய கல் ஒன்றை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது. உடனடியாக அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றது, சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த அசோக் என்பது தெரியவந்தது. இவர் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, சம்பவத்தன்று மது அருந்த பணம் இல்லாததால் ஏடிஎம் மையத்தை உடைத்து பணம் திருடலாம் என்று அங்கு சென்றதாகவும், ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், போலீஸார் வந்ததும் தப்பி ஓடிவிட்டதாக அசோக் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து போலீஸார் அசோக்கைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அசோக், ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.