போபால் : நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ம.பி., தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும், பெண் சிவிங்கி சிறுத்தை ஒன்று, நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின், கோரியா பூங்காவில் இருந்த சிவிங்கி சிறுத்தை, 1948ல் இறந்த பின், நம் நாட்டில் சிவிங்கிகள் இனமே இல்லை.
இந்த இனத்தை, நம் நாட்டில் மீண்டும் பெருக்கும் நோக்கில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து, 5 பெண் மற்றும் 3 பெண் என, எட்டு சிவிங்கி சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேசத்தின், குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.
ஒவ்வொரு சிறுத்தைகளுக்கும், ‛ரேடியோ காலர்’ பொருத்தப்பட்டு, செயற்கைகோள் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதில், ‛சியாயா’ என்ற பெண் சிறுத்தை, நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.
மத்திய பிரதேச மாநில, வனத்துறை தலைவர் கூறுகையில்,‛ஐந்து நாட்களுக்கு முன்பு, சியாயா நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. அவை, தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளன. பார்வைக்கு விடப்படும்போது தான், குட்டிகளின் பாலினம் பற்றி, தெரிய வரும்,” என்றார்.
இந்த குட்டிகளின் வீடியோவை, மத்திய வனத்துறை அமைச்சர், பூபேந்தர் யாதவர், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.