மதுரை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பணி நியமனங்களுக்காக 3 மாதங்களில் ஒருங்கினைந்த தேர்வு வாரியம் அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர் மாவட்ட ஆவினில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 60 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எம்.தண்டாபணி பிறப்பித்த உத்தரவு: ஆவின் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. பணியாளர் நியமனம் மற்றும் நிதி மேலாண்மை ஆகியன ஆவின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளன. மனுதாரர்கள் நியமனத் தேர்வு முறைப்படி நடத்தப்பட்டதா? அல்லது தேர்வு நடைபெறவில்லையா?. அந்த தேர்வின் வினா மற்றும் விடைத்தாள்கள் தற்போது இல்லை என்று சொல்வதை எல்லாம் பார்க்கையில் மிகுந்த சந்தேகம் வருகிறது.
மனுதாரர்கள் சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக பணியில் சேர்ந்துள்ளனர். இந்த வழக்கில் அதிகாரிகளே குற்றவாளிகள் மனுதாரர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் அவர்களை நீதிமன்றத்தால் பாதுகாக்க முடியாது. மனுதாரர்கள் நியமனங்களில் ஆவின் ஆணையருடன் அந்தந்த பகுதி பொது மேலாளர்களுக்கும் பங்கு உள்ளது. அவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போல ஒரே குடையின் கீழ் தான் பணி நியமனங்கள் நடக்க வேண்டும். நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதனால் கூட்டுறவு சங்க பணி நியமனங்களுக்கு ஒருங்கிணைந்த தேர்வு வாரியத்தை உருவாக்கிடத் தேவையான சட்டத்திருத்தங்களை 3 மாதத்தில் மேற்கொள்ள வேண்டும். அதுவரை கூட்டுறவு சங்கங்களில் எந்தவித பணி நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது.
மனுதாரர்களுக்கு அந்தந்த வேலை வாய்ப்பக பதிவு மூப்பை தொடர்ந்து வழங்க வேண்டும். ஆவின் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட பொதுமேலாளர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை கால்நடைத்துறை முதன்மை செயலர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.