‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல்பாகம் கடந்தாண்டு வெளியாகி, ரூ.500 கோடி வசூலை கடந்தது. தற்போது இரண்டாம் பாகம் வரும் ஏப்., 28ல் ரிலீஸாகிறது.
இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாய் மாலை துவங்கியது. இதில் படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் சிம்பு ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் ஷோபனா, ரேவதி, குஷ்பு போன்ற 80ஸ் கதாநாயகிகளும், பாரதிராஜா, லிங்குசாமி போன்றவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு
விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, நடன இயக்குனர் பிருந்தா, கலை இயக்குனர் தோட்டா தரணி உள்ளிட்டவர்களுடன் சிறப்பு விருந்தினர்களும் இந்த சிவப்பு கம்பள வரவேற்பை ஏற்றுக் கொண்டனர். இதில் அந்தக்கால ராஜ சிம்மாசனம் வைக்கப்பட்டு இருந்தது. இதில் பல பிரபலங்கள் அமர்ந்து போட்டோகிராபர்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்தனர்.
ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் முதல்பாக வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பை எதிர்பார்க்கிறோம். படமும் அப்படி தான் வந்துள்ளது. எல்லோரும் எதிர்பார்க்கிற பிரமாண்டம், எமோஷன் இரண்டாம் பாகத்திலும் இருக்கும். உங்களை போன்று நாங்களும் இந்தப்படம் பெரிய வெற்றி பெறணும் எதிர்பார்க்கிறோம். முதல்பாகத்திற்கு கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. முதல்பாகத்தை விட இரண்டாம்பாகத்தில் எனக்கான போர்ஷன் அதிகமாக இருக்கும். கதை அப்படி தான் இருக்கும். அதேசமயம் எல்லோருக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும். 20 ஆண்டுகளில் நான் குறைவான படங்களே நடித்துள்ளேன். நிறைய படங்கள் பண்ணனும். இந்தாண்டு எனது நடிப்பில் 4 படங்கள் வெளிவரும்.
நடிகர் ரகுமான்
இந்த படத்தில் நான் இருந்ததே பெரிய பாக்கியம். இந்த மாதிரி ஒரு கனவு படம் வந்தது மகிழ்ச்சி. இந்த படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்தது. அதில் படத்தில் நடித்த எல்லோரும் இருப்போம். முதல்பாகத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் உங்கள் ஆதரவை தர வேண்டும்.
விக்ரம் பிரபு
பிஎஸ் 1க்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிஎஸ் 2க்கு ஆர்வமாய் உள்ளோம். ஒரு ரசிகனாக நானும் இந்த படத்தை எதிர்பார்த்து உள்ளேன். இது எங்களின் முதல்படி. இன்னும் ஒரு மாதத்தில் படம் வெளியாக உள்ளது. அனைவரும் வந்து ரசியுங்கள்.
ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. உங்களை போன்று நாங்களும் பொன்னியின் செல்வன் 2 படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் ஆவலாய் உள்ளோம். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.
ஐஸ்வர்ய லட்சுமி
நான் முன்பே சொன்னது போன்று மணி சார் படத்தில் நான் இருக்க விரும்பினேன். ஆனால் பூங்குழலி மாதிரி வேடம் கிடைத்ததும், அதற்கு கிடைத்த வரவேற்பு அதிகமாக இருந்தது. இதை பெருமையாக கருதுகிறேன்.
திரிஷா
பிஎஸ் 1க்கு ஒரு வித பயம் இருந்தது. ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பு, பாராட்டுகள் அதிகமாக இருந்தது. பிஎஸ் 2 முதல்பாகத்தை விட இரட்டிப்பு பிரமாண்டமாய் இருக்கும். நானும் மிகவும் ஆவலாய் உள்ளேன்.
பார்த்திபன்
நான் முதல்பாகத்தையே இன்னும் பார்க்கவில்லை. இரண்டாம் பாகத்தில் என்ன இருக்கும் என தெரியவில்லை. ஆனால் முதல்பாகத்தில் இந்த படத்திற்கு எனக்கு கிடைத்த வரவேற்பு நன்றாக இருந்தது. எல்லாவற்றையும் விட இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன். முதல்பாகத்திற்கு 500 கோடி கிடைத்தது. இரண்டாம் பாகத்தில் அது இரண்டு மடங்காக கிடைக்கும் என நம்புகிறேன்.
சரத்குமார்
பிஎஸ் 1 எனும் திரைகாவியத்திற்கு மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பெரிய பழுவேட்டயர் பாத்திரம் தந்த மணிரத்னம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கு என் நன்றி. உங்களை போன்று நானும் பிஎஸ் 2வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மற்றுமொரு மாபெரும் வெற்றியை நாம் பார்க்க போகிறோம்.