திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இந்த நிறுவனத்தில் திடீரென தீவிரவாதிகள் உள் நுழைந்தால் எப்படி நிறுவனத்தை பாதுகாப்பது? என்பது குறித்தும், தொழிலாளர்களை மீட்பது குறித்தும் ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அப்போது, திடீரென பெல் நிறுவன வளாகத்தில் தேசிய பாதுகாப்புப்படையினர் 120 வீரர்களும், தமிழ்நாடு கமாண்டோ படையைச் சேர்ந்த 40 வீரர்களும் உள்ளே புகுந்தனர். கமாண்டோ படையினரின் இந்த திடீர் ஒத்திகை குறித்து இரவுப் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு எதுவும் தெரியாததால் அவர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு தொடங்கிய ஒத்திகை இன்று அதிகாலை இரண்டு மணி வரையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையின் போது திருவெறும்பூர் பகுதியின் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் பெல் நிறுவன காவல் நிலைய ஆய்வாளர் கமலவேணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதற்கு முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்திலும் இவ்வாறு அதிரடிப்படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.