லாகூர், பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், ரம்ஜானுக்காக அரசு அறிவித்த இலவச கோதுமை மாவு பாக்கெட்டுகளை பெறுவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில், ஒரு பெண் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு, பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் நோன்பு சமீபத்தில் துவங்கியது. இதையொட்டி, பஞ்சாப் மாகாண அரசு, இங்கு வசிக்கும் ஏழை மக்கள் பயன்பெற ஏதுவாக, 10 கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகளை, பொது வினியோக மையங்களின் வாயிலாக இலவசமாக வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து, மாகாணத்தில் பல்வேறு இடங்களில் கோதுமை மாவு பாக்கெட்டுகளை பெற, அடிதடியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதற்கிடையே, சாம்பிரியல் நகரில் உள்ள பொது வினியோக மையத்திற்கு கோதுமை மாவு பாக்கெட்டுகளை எடுத்துச்சென்ற ஒரு லாரியை பொதுமக்கள் வழிமறித்து, மாவு பாக்கெட்டுகளை கொள்ளை அடித்து சென்றனர்.
இதுபோல் பல்வேறு இடங்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 11 பேர் பலியாகினர்.
இதுகுறித்து பஞ்சாப் மாகாண பொறுப்பு முதல்வர் மொசின் நக்வி கூறுகையில், ”கூட்டநெரிசலை தவிர்க்க, காலை 6:00 மணி முதல் இலவச கோதுமை மாவு வினியோகம் துவங்கப்படும்.
”பொது வினியோக மையங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, கோதுமை மாவு முறையாக வினியோகிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.