திங்கள்சந்தை: நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா. மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் இவர் அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: களியங்காடு அருகே சுரேஷ்குமார் என்பவர், அந்த பகுதியில் நாகர் கோயில் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தன்னை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தனக்கு தெய்வ அருள் வந்ததால் அந்த பதவியை விட்டுவிட்டு இந்த கோயிலை நடத்தி வருவதாகவும் கூறினார்.
எங்கள் குடும்பத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதை தீர்க்க தனது கோயிலில் குடி கொண்டுள்ள பாம்பு வாந்தி எடுத்ததில் உருவான மரகத மற்றும் மாணிக்க கற்கள் என்றும் கூறினார். அதை நம்பி ரூ. 7.14 லட்சம் வரை கொடுத்து அதை வாங்கினோம். அந்த கற்களை நகை கடைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் சாதாரண கற்கள் என தெரிய வந்தது.இதேபோல பலரிடம் மோசடி செய்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதுதொடர்பாக சாமியார் சுரேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளி அசோக்குமார் ஆகியோர் மீது இரணியல் போலீசார் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அந்த சாமியாரால் யாராவது ஏமாற்றப்பட்டு இருந்தால், அவர்களும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் கூறுகையில், ‘விசாரணைக்கு பின் தான், முழுவிவரம் தெரிய வரும்’ என்றார்.