சென்னை: தமிழகத்தில் 75 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாலர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடைபெறுவதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரப்பப்பட்டது. இதையடுத்து பிஹார், ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பில் செயலர், ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழகம் வந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து, களத்தில் இருந்த உண்மைத்தன்மையை வீடியோவாக பதிவு செய்தனர். தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்பது உறுதியான நிலையில், வதந்தி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 75,321 வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொழிலாளர் நலத்துறையின் வெளி மாநில தொழிலாளர்களுக்கான https://labour.tn.gov.in/ism/ என்ற இணையதளத்தில் 75,321 பேர் பதிவு செய்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.